

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் இறந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தக் கலவரத்தைத் தூண்டியதாக ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
போலி கம்பெனிகள் மூலம் ரூ.1.10 கோடி பணத்தை மோசடியாக பரிவர்த்தனை செய்து அந்தப் பணத்தை கலவரத்தைத் தூண்டிவிட தாஹிர் உசேன் செலவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் வடகிழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாஹிர் உசேன் மீது அமலாக்கத் துறை சார்பில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அமிதாப் ராவத், 19-ம் தேதியன்று தாஹிர் உசேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.