Published : 18 Oct 2020 07:07 AM
Last Updated : 18 Oct 2020 07:07 AM

வீட்டிலிருந்து வேலை செய்வதால் முதுகுத் தண்டு பிரச்சினை: மருத்துவர்கள் எச்சரிக்கை

வீட்டில் இருந்தபடி அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் நடைமுறையால், முதுகுத் தண்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஐ.டி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தின.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தாலும் கூட, கரோனா அச்சத்தால் இந்த நடைமுறையையே பல நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. அதேபோல, பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அலுவலகப் பணி நிமித்தமாகவும், ஆன்லைன் வகுப்புகளுக்காகவும் பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர வேண்டியுள்ளது. இது, முதுகுத்தண்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எலும்பு நோய் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து, புணேவைச் சேர்ந்த டாக்டர் நிராலி மேத்தா கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவலால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணிகளையும் பெரும்பாலானோர் செய்து வருகின்றனர். இதனால், உடல் இயக்கம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. அத்துடன், ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவதால் பலருக்கு முதுகு வலி ஏற்படுவது அதிகரித்துள்ளது.

முறையான இருக்கைகளை பயன்படுத்தாமல் இருப்பது, கூன் போட்டு அமர்ந்திருப்பது, சிறிதளவு கூட உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது ஆகிய காரணங்களால் முதுகுத் தண்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வலி ஆரம்பிக்கும் போதே, மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால், இதனை எளிதில் சரிசெய்து விடலாம்.

இவ்வாறு டாக்டர் நிராலி மேத்தா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x