

கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோயில் தந்திரி, பூஜைகளை நடத்தி வந்தார். தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி தரப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
தினமும் 250 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும். முதல் நாளில் நேற்று 246 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சபரிமலை கோயில் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இணையதள முன்பதிவை முதலில் மேற்கொள்பவர்களுக்கு தரிசனத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பு சோதனை செய்து கரோனா தொற்று இல்லையென்ற மருத்துவ சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில் பம்பை அல்லது நிலக்கல்லில் உள்ள மருத்துவ முகாம்களில் கரோனா பரிசோதனை செய்து, முடிவுகளை அறிந்து கொண்டு கோயிலுக்குள் வரலாம். மேலும், கரோனா தொற்று காரணமாக, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் சன்னிதானத்தில் நெய்யபிஷேகம், அன்னதானம் போன்றவற்றை நடத்தவும் அனுமதி தரப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். மண்டல மகர விளக்கு பூஜைகள் நவம்பர் 16-ம் தேதி தொடங்கவுள்ளன.