தனிப்பட்ட இணையதள முகவரியில் இருந்து பிரதமர் மோடியின் தகவல்கள் கசிவு: ‘டார்க் வெப்’பில் வெளியானது கண்டுபிடிப்பு

தனிப்பட்ட இணையதள முகவரியில் இருந்து பிரதமர் மோடியின் தகவல்கள் கசிவு: ‘டார்க் வெப்’பில் வெளியானது கண்டுபிடிப்பு
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையதள தகவல்கள், ‘டார்க் வெப்’ எனப்படும் இணையத்தில் கசிந்துள்ளது.

கம்ப்யூட்டரில் சாதாரணமாக நாம் பிரவுஸ் செய்யும் போது, ஒரு தகவலை தேடும் போது, அது சர்வரில் பதிவாகும். பின்னர் அதற்கான தகவல்களை கணினிக்கு சர்வர் அனுப்பும். இந்த 2 நடவடிக்கைகளும் நேரடியாக நடைபெறும். இது சர்வரிலும் பதிவாகிவிடும். இதன்மூலம் தகவல் கேட்டவர், எங்கிருந்து தகவல் பெறப்பட்டது போன்ற அனைத்தையும் கண்டுபிடித்து விட முடியும்.

ஆனால், ‘டார்க் வெப்’ போன்ற பிரவுசரில் இதுபோன்ற நேரடி தொடர்பு கிடையாது. இதில் ஒரு கம்ப்யூட்டரில் இருந்து கேட்கப்பட்ட தகவல்கள், கிடைத்த தகவல்கள் எதுவும் பதிவாகாது. இதற்காக தனி சாப்ட்வேர், தொடர்பு முகவரி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ‘டார்க் வெப்’பை சட்டவிரோத செயல்பாடுகளுக்குதான் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையதள தகவல்கள், இந்த டார்க் வெப்பில் கசிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதளம் மூலம், தேசிய நிவாரண நிதிக்கு அன்பளிப்பு அளித்த லட்சக்கணக்கான நபர்களின் தகவல்களும் வெளியானதாகக் கூறப்படுகிறது. அவர்களின் இமெயில் முகவரி, மொபைல் எண் போன்ற முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சைபர்செக்யூரிட்டி நிறுவனமான ‘சைபல்’ கூறும்போது, டார்க் வெப்பில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட ‘Narendramodi.in’ இணையதள தகவல்கள் கசிந்துள்ளது தெரிய வந்தவுடன், அதை கடந்த 10-ம் தேதி முடக்கிவிட்டோம் என்று தெரிவித்துள்ளது.

சைபல் சிஇஓ பீனு அரோரா கூறும்போது, ‘‘பிரதமர் மோடியின் தகவல்கள் கசிந்ததற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இதுபோல் நிறைய தகவல்கள் கசிந்துள்ளன. பொதுவாக பணம் பெறுவதற்காக இதுபோல் தகவல்கள் கசியவிடப்படுகின்றன’’ என்றார்.

பிரதமரின் தனிப்பட்ட இணையதளம் மூலம் ஆளும் பாஜக.வுக்கு நன்கொடை அளித்தவர்கள் விவரங்கள், டார்க் வெப்பில் வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இந்திய கம்ப்யூட்டர் அவசர கால நடவடிக்கை குழு (சிஇஆர்டி-இன்) உடனடியாக எந்த பதிலும் கூறவில்லை. அரசு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in