

நரேந்திர மோடிக்கு எதிராக தேர்தலுக்கு முன்பு இகழ்ச்சியாக, பெருமைகுலைக்கும் வண்ணம் ட்விட்டர் பதிவுகளைச் செய்த தேவு சோதாங்கர் மீது கோவா போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதேபோல் மன்மோகன் சிங்கிற்கு எதிராக ட்விட்டர் அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராகவும் அரசு செயல்படுமா என்று காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
31 வயதான, மும்பையைச் சேர்ந்த கப்பல் கட்டுமான தொழிலதிபர் தேவு சோதாங்கர் தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ச்சியாக ட்வீட் செய்துள்ளார். இதனால் கோவா போலீஸ் அவர் மீது வழக்கு தொடர்ந்து அவரைக் கைது செய்யவும் முயன்று வருகிறது.
இது பற்றி கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங் தனது ட்விட்டரில் சோதாங்கரை வேட்டையாடத் துடிக்கும் போலீஸ் முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கை வசை பாடியவர்கள் மீதும் இத்தகைய நடவடிகையை எடுக்குமா? என்று கேட்டுள்ளார்.
கோவா போலீஸின் இத்தகைய செயல் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் பனாஜியில் மாநில போலீஸ் தலைமைச் செயலகத்தின் முன் ஆர்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.