சட்டவிரோத இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் திருப்பம்: ஜனார்த்தன ரெட்டி, பாஜக எம்எல்ஏக்கள் வீடுகளில் சோதனை

சட்டவிரோத இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் திருப்பம்: ஜனார்த்தன ரெட்டி, பாஜக எம்எல்ஏக்கள் வீடுகளில் சோதனை
Updated on
2 min read

சட்ட விரோதமாக இரும்பு தாதுக்களை ஏற்றுமதி செய்த வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் உட்பட‌ 7 பேரின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுரங்கங்கள் தொடர்பான‌ பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியின்போது, பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி சுற்றுலா மற்றும் தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இவர் பெல்லாரி, பீஜாப்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் பல்வேறு சுரங்க நிறுவனங்களையும் நடத்தி வந்தார். இதன்மூலம் பல்வேறு நாடுகளுக்கு பல கோடி டன் இரும்பு தாதுக்களை ஏற்றுமதி செய்து வந்தார்.

இந்நிலையில், இவர் மீது கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே கடந்த 2012-ம் ஆண்டு ஒரு வழக்கு பதிவு செய்தார். அதில், “கடந்த 2006-07 மற்றும் 2011-12 ஆகிய ஆண்டுகளில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் இரும்பு தாதுக்களை ஜனார்த்தன ரெட்டி சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்துள்ளார். மேலும் பிலிகேரி துறைமுகத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 7.73 மில்லியன் டன் இரும்பு தாதுக்களை அத்துமீறி கடத்தியுள்ளார்” என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனத்தில் பணியாற்றிய 7 பேர் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனிடையே, கடந்த 2011-ம் ஆண்டு அனந்தப்பூர் சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ போலீஸார் ஜனார்த்தன‌ ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து கர்நாடக லோக் ஆயுக்தா சிறப்பு புலனாய்வு போலீஸார், சட்ட விரோதமாக இரும்பு தாதுக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் லோக் ஆயுக்தா சிறப்பு புலனாய்வுப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் கவுஷலேந்திர குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஜனார்த்தன ரெட்டியின் பெங்களூரு, பெல்லாரி வீடுகளில் சோதனை நடத்தினர்.

மேலும் அவரது நெருங்கிய நண்பர்களான ஸ்வஸ்திக் நாகராஜ், கரப்புரி மகேஷ், ரமேஷ் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதேபோல ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளர்களும், வழக்கில் தொடர்புடையவர்களு மான பாஜக எம்எல்ஏ சுரேஷ் பாபு, பாஜக ஆதரவு எம்எல்ஏ நாகேந்திரா, பெல்லாரி மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் பந்தர் ஜெயந்த் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 5 மணி நேரம் நடை பெற்ற இந்த சோதனையில் 2 கணினி, 5 மடி கணினி, 3 ஐபேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுமட்டுமில்லாமல் பல்வேறு சுரங்க நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களையும், இரும்பு தாதுக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வழக்கில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால் ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்டோர் கைதாக வாய்ப்பு இருப்ப‌தாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in