Published : 17 Oct 2020 07:50 PM
Last Updated : 17 Oct 2020 07:50 PM

பயணத்துக்குத் தயாராகும் கொச்சின் தண்ணீர் மெட்ரோ திட்டம்: பணிகள் துரிதம்

கொச்சி மெட்ரோ படகு ஜெட்டியின் பணிகள் நடந்து வருகின்றன.

எர்ணாகுளம்

கேரளாவின் ‘கொச்சின் வாட்டர் மெட்ரோ’ திட்டத்தின் (Kerala's Kochi Water Metro project) கட்டுமானப் பணிகள் 2021 ஜனவரியில் முதல் பயணத்தைத் தொடங்குவதற்கான இலக்கைக் கொண்டு முன்னேறி வருகின்றன. இப்பணிகளை மேற்கொண்டு வரும் கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் (The Kochi Metro Rail Ltd) தன் வேலையைத் துரிதப்படுத்தியிருக்கிறது.

வைட்டிலா, கக்கநாடு, உயர் நீதிமன்றச் சந்திப்பு, வைபின், சேரநல்லூர் மற்றும் எலூர் ஆகிய இடங்களின் முனைகளில் தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், போல்கட்டி, கோட்டை கொச்சி, மட்டஞ்சேரி, கடமகுடி, பாலியம் துருத், சேரநல்லூர், தெற்கு சித்தூர், முலவுகாடு வடக்கு மற்றும் எர்ணாகுளம் ஃபெர்ரி ஆகிய இடங்களுக்கான முனைகளில் (டெர்மினல்) டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. கொச்சி மெட்ரோ ரயில் நிலையங்களைப் போலவே உலகத் தரம் வாய்ந்த டெர்மினல்களை ‘கொச்சின் வாட்டர் மெட்ரோ’ உருவாக்கி வருகிறது. டிக்கெட் வசதிகள் ஏற்பாடுகளும் இதேபோல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்குச் சிரமமின்றிப் பயணிக்கவும் வசதிகள் வழங்கப்படும். படகு ஜெட்டிகள் (boat jetties) நீர் மட்டத்திற்கு ஏற்பத் தண்ணீரில் மிதக்கும் வகையில் கட்டப்பட்டு வருகின்றன. அதிக மற்றும் குறைந்த அலைகளின்போது படகில் செல்வதில் ஏற்படும் தொந்தரவை இது தவிர்க்கும்.

கொச்சி கப்பல் கட்டிடத்தால் கட்டப்படும் முதல் படகு டிசம்பரில் ஒப்படைக்கப்படும். இந்தப் படகில் 100 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். அடுத்த நான்கு படகுகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 23 படகுகளும், 50 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 55 படகுகளும் இருக்கும். படகு உடலின் கட்டுமானத்திற்கு அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் எட்டுப் படகுகள் வரை சரிசெய்யக்கூடிய படகு முற்றம் கின்ஃப்ரா பூங்காவில் அமைந்திருக்கும்.

ரூ.678 கோடி செலவில் கட்டப்படும் கொச்சி தண்ணீர் மெட்ரோ சேவை, 15 வழித்தடங்களில் வைபின், வெலிங்டன், எடகோச்சி, கும்பலம், நெட்டூர், விட்டிலா, எலூர், கக்கநாடு, போல்கட்டி மற்றும் முலவ்காடு தீவுகளின் பயண இடையூறுகளைத் தீர்க்கும். தண்ணீர் மெட்ரோ சேவை, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும்.

மேற்கண்ட தகவல்களைக் கேரள அரசின் தகவல்-மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x