

உத்திரப்பிரதேசம் பலியாவில் ரேஷன் கடைகள் ஏலத்தில் தன் போட்டியாளரை பாஜக நிர்வாகி சுட்டுக் கொன்றிருந்தார். மாவட்ட துணை ஆட்சியர், டிஎஸ்பி முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தில் கைது செய்யப்படாதவர் பற்றி துப்பு அளிப்பவருக்கு ரூ.75,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யின் பலியா மாவட்டத்தின் ரிவாதி தாலுக்கா துர்ஜான்பூரில் நியாயவிலைக் கடைகள் ஏலம் விடப்பட்டன. இதில் இருந்த போட்டியால் எழுந்த மோதலில் பாஜகவின் நிர்வாகியான தீரேந்தர் பிரதாப் சிங் தன் அரசு உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அவரது போட்டியாளரான ஜெய் பிரகாஷ் பால் பலியானார். மற்ற ஒருவருக்கு குண்டு காயம் பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவம், நியாயவிலை கடைகளின் ஏலத்தை நடத்திய பலியா மாவட்ட துணை ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. அங்கு பாதுகாப்பிற்கு உ.பி. காவல்துறையின் பலியா டிஎஸ்பியும் இருந்தார்.
அவர்கள் முன்பாக துப்பாக்கியால் சுட்ட தீரேந்தர் சாவகாசமாக நடந்து சென்றிருந்தார். இதையடுத்து உபி எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உ.பி.யில் ஆளும் பாஜக அரசு ஆளானது.
இதனால், தலைமறைவாகி விட்ட பாஜக நிர்வாகியான தீரேந்தர் பிரதாப் சிங் பற்றிய துப்பு அளிப்பவருக்கு ரூ.75,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது சகோதரர்களான தேவேந்திர பிரதாப் சிங் மற்றும் நரேந்திர பிரதாப் சிங் ஆகியோருக்கு இவ்வழக்கில் சம்மந்தம் இருப்பதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு வழக்கின் குற்றவாளிகள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் இருதரப்பிலும் மொத்தம் 20 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.