Last Updated : 17 Oct, 2020 05:58 PM

 

Published : 17 Oct 2020 05:58 PM
Last Updated : 17 Oct 2020 05:58 PM

2019-ல் லோக்பால் அமைப்பில் 1,427 புகார்கள்: மத்திய அமைச்சர்களுக்கு எதிராக 4 , மாநில அதிகாரிகளுக்கு எதிராக 613 புகார்கள்

கோப்புப்படம்

புதுடெல்லி

ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பிடம் கடந்த 2019-20இல் மத்திய அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக 1,427 புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

அரசு அதிகாரிகள், மக்கள் பணியில் இருப்போரின் ஊழல் குறித்து விசாரிக்க லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக நீதிபதி பினாகி சந்திர கோஷ், அவருக்குக் கீழ் 8 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த மார்ச் 27-ம் தேதி பினாகி சந்திர கோஷ் லோக்பால் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கடந்த 2019-20 ஆம் ஆண்டு லோக்பால் அமைப்பிற்கு வந்த புகார்கள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

2019-20 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1,427 புகார்கள் வந்துள்ளன. இதில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு எதிராக 4 புகார்களும், மாநில அமைச்சர்களுக்கு எதிராக 6 புகார்களும் வந்துள்ளன. மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராக 613 புகார்கள், மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக 245 புகார்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் உள்ளிட்டோருக்கு எதிராக 200 புகார்கள், தனியார் அமைப்புகள், தனியாருக்கு எதிராக 135 புகார்கள் தரப்பட்டுள்ளன.

மொத்த புகார்களில் 220 புகார்கள் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 1,347 புகார்கள் மீது விசாரணை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. இதில் 78 புகார்கள் முறையாக இல்லை எனக் கூறி மீண்டும் பதிவு செய்யக் கோரப்பட்டது. 45 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. 32 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

லோக்பால் அமைப்பிடம் இருந்து அனுப்பப்பட்ட புகார்களில் 25 புகார்கள் மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் கிடப்பில் உள்ளன. அந்தப் புகார்கள் மீது விசாரண அறிக்கை கோரப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறைக்கு 4 புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை கோரப்பட்டுள்ளது. 2 புகார்கள் சிபிஐ அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நிலவரம் குறித்துக் கேட்கப்பட்டுள்ளது.

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், நீர்வளத்துறை, வருமான வரித்துறை, பள்ளிக் கல்வித்துறை, அஞ்சல்துறை, கப்பல் போக்குவரத்து ஆகிய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தலா ஒரு புகார் மீது விசாரணை நிலுவையில் இருக்கிறது.

இவ்வாறு புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x