Last Updated : 17 Oct, 2020 01:40 PM

 

Published : 17 Oct 2020 01:40 PM
Last Updated : 17 Oct 2020 01:40 PM

உ.பி.யில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை: 3 பேர் கைது 

ஃபிரோசாபாத்

உ.பி.யில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னதாக டண்ட்லா தொகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் வரும் நவம்பர் 3-ம் தேதி ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள டண்ட்லா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரப் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக டண்ட்லா தொகுதியின் கீழ் வரும் நாக்லா பீச் பகுதியில் பாஜக நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

46 வயதான டி.கே.குப்தா வெள்ளிக்கிழமை மாலை நாக்லா பீச் பகுதியில் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தின்போது வழக்கம்போல தனது கடையை மூடிவிட்டு நாக்லா பீச் பகுதியில் பாஜக நிர்வாகியான குப்தா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் குப்தா அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கும் முன்பே உயிரிழந்தார்.

இதனை அடுத்து மூத்த காவல்துறை அதிகாரிகள் நாக்லா பீச் பகுதிக்கு விரைந்தனர். அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர். நேற்று மாலை நடைபெற்ற இச்சம்பவத்திற்குப் பிறகு குப்தாவின் கொலைச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளூர்வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டண்ட்லா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இக்கொலைச் சம்பவத்திற்குப் பின்னால் அரசியல் போட்டி காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலைக் குற்றவாளிகளைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசியல் பிரமுகர் வீரேஷ் தோமர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் சச்சீந்திர படேல் கூறியதாவது:

''இக்கொலைச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள குப்தாவின் குடும்பத்தினர், தங்களுக்குச் சில பேர் மீது சந்தேகம் உள்ளதாகக் கூறினர். அதன் அடிப்படையில் குற்றவாளிகளைப் பிடிக்க நேற்று இரவு, தனிப்படை போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வீரேஷ் தோமர் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இம்மூவரும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான வீரேஷ் தோமர் என்ற அரசியல் பிரமுகர், ஏற்கெனவே குப்தாவுடன் முன்விரோதம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பாக இருவருக்கும் ஃபேஸ்புக்கில் வார்த்தைப் போர் நடந்ததும் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் முழுமையாக ஆராயப்படுகின்றன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது''.

இவ்வாறு மூத்த காவல் கண்காணிப்பாளர் சச்சீந்திர படேல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x