

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் (என்சிடிசி) மூலம்சுகாதார கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி சுகாதார பராமரிப்பு நிதி வழங்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் வரும் 19-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (என்சிடிசி) சட்டப்பூர்வ தன்னாட்சி பெற்ற, மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும்.இந்நிறுவனம் கூட்டுறவு மூலம் சுகாதார உட்கட்டமைப்பை மேம் படுத்த ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. ‘கூட்டுறவு மூலம் சுகாதாரம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தினை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து என்சிடிசியின் இயக்குநர் சந்தீப் குமார் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘‘என்சிடிசி மூலம் கூட்டுறவு நிறுவனங்களுக்கு எதிர்வரும் ஆண்டுகளில் ரூ.10,000 கோடி அளவிற்கு காலக்கடனாக வழங்கப்பட உள்ளது. உலகளாவிய நோய் தொற்றுள்ள இக்காலகட்டத்தில் கூட்டுறவு மூலம் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் கூட்டுறவில் இணைந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என மத்திய அரசு கருதுகிறது. கடந்தஆகஸ்ட் 15-ல் பிரதமரால் தொடங்கப்பட்ட தேசிய மின்னணு சுகாதாரகொள்கைக்கு ஏற்ப இத்திட்டமானது கிராமப்புறங்களை மேம்படுத்த உதவும்’’ என்றார்.
நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் சுமார் 52 மருத்துவமனைகளில் கேரளாவில் அதிகம் உள்ளன.இவை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டபடுக்கை வசதிகளுடன் இயங்கிவருகின்றன. இதுபோன்ற, கூட்டுறவு நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்கு இத்திட்டம் ஊக்கமாக அமையும். என்சிடியின் இத்திட்டம் மத்திய அரசின் தேசிய சுகாதார கொள்கையின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது.
இது, 2017-ம் ஆண்டின் தேசியசுகாதார நலன்கள் கொள்கையின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கி உள்ளது. ஆரோக்கியத்தில் முதலீடு, சுகாதார சேவைகளை ஒழுங்கமைத்தல், மருத்துவ பன்மைத்துவத்தை ஊக்குவித்தல், மலிவு விலையில் சுகாதார பராமரிப்பு போன்றவை கிராமப்புற மக்களுக்கு பயனளிக் கும் என அரசு கருதுகிறது.
மருத்துவமனைகள், சுகாதாரம், மருத்துவக் கல்வி, செவிலியர் கல்வி, துணை மருத்துவக் கல்வி, சுகாதார காப்பீடு போன்றவற்றை ஏற்படுத்தி கூட்டுறவு மூலம் அனைவரும் பயன்பெற இத்திட்டம் உதவிகரமாக அமையும்.இதன்மூலம், கிராமப்புறங்களில் மாற்றத்தை கொண்டுவருவதுடன் வலுவான கூட்டுறவு அமைப்புகளின் மூலம் ஒருங்கிணைந்த முழுமையான சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்க இயலும்என மத்திய அரசு நம்புகிறது.