Published : 17 Oct 2020 06:47 AM
Last Updated : 17 Oct 2020 06:47 AM

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றால் டீன் ஏஜ் இளைஞர் முடக்குவாதத்தால் பாதிப்பு: மருத்துவர்கள் ஆய்வில் சந்தேகம்

மேற்கு டெல்லியை சேர்ந்த 19 வயது இளைஞரின் 2 கைகள், 2 கால்களும் திடீரென செயல்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் அவரால் திடீரென மாடிப்படி ஏற முடியவில்லை. மறுநாள் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவரால் வேறு ஒருவர் உதவியுடன் கூட நடக்க முடியவில்லை. பதறிப் போன பெற்றோர் உடனடியாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த இளைஞரை மருத்துவர்கள் தீவிரமாகப் பரிசோதித்துப் பார்த்தனர். மேலும், வேறு எந்த நாட்பட்ட நோயிலும் அந்த இளைஞர் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்தது.

ஆனால், மருத்துவப் பரிசோதனை முடிவில் ‘கில்லேய்ன்-பார்ரி சிண்ட்ரோம்’ (ஜிபிஎஸ்) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த ஜிபிஎஸ் மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடும். இது புற நரம்பு மண்டலத்தில் ஏற்படக் கூடியது. மருத்துவப் பரிசோதனையில் அந்த இளைஞர் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரிந்தாலும், அவருடைய உடலில், ‘கோவிட்-19’ வைரஸ் தொற்றுக்கான எதிர்ப்பு அணுக்கள் (ஆன்டிபாடிஸ்) உருவாகி இருப்பது தெரிய வந்தது. இதனால், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து கங்காராம் மருத்துவமனை மருத்துவர் அதுல் கோஜியா கூறும்போது, ‘‘கரோனா வைரஸுக்கான நோய் எதிர்ப்பு அணுக்கள் அந்த இளைஞரின் செரிபுரோ ஸ்பைனல் திரவத்தில் காணப்பட்டன. அதனால், கரோனா வைரஸ் தொற்றால், அதிகபட்ச நோய் எதிர்ப்பு எதிர்வினையால் ஜிபிஎஸ் என்ற அரிய நோய்க்கு தள்ளப்பட்டிருக்கலாம்’’ என்று சந்தேகம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘மருத்துவமனையில் சேரும் போது அந்த இளைஞருக்கு காய்ச்சல் இல்லை. ஆனால், அவரால் மூச்சுவிட முடியவில்லை. அதனால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தினோம். சில வாரங்கள் சிகிச்சைக்குப் பிறகு நிலைமை முன்னேறியதும் அவருக்கு பிசியோதெரபி கொடுக்கப்பட்டது’’ என்றார்.

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அவரால் கால்களை அசைக்க முடிகிறது. கைகளை உயர்த்த முடிகிறது. ஆனால், சுயமாக அவரால் எப்போது எழுந்து நின்று நடக்க முடியும் என்பது தெரியவில்லை என்று அதுல் கோஜியா கூறினார்.

இதுகுறித்து ‘நியூராலஜிக்கல் சயின்சஸ்’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், ‘‘வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் ஜிபிஎஸ் எனப்படும் அரிய வகை பாதிப்பு ஏற்படும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புற நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவரது உடலில் வைரஸ் அல்லது பாக்டீரியா (ஆன்டிஜென்) தொற்று ஏற்பட்டால், உடனடியாக நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகும். அதிகபட்ச நோய் எதிர்ப்பு மண்டலம் தூண்டப்படும். அப்போது நரம்பு மண்டலம் சேதமடைய வாய்ப்புள்ளததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x