

தண்டனைக் காலம் முடிந்த பிறகும் 48 இந்தியர்கள் வெளிநாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. அவினாஷ் ராய் கேட்டுக் கொண்டதன் பேரில் மாநிலங்களவையின் உறுதிமொழிக் குழு மத்திய அரசிடம் இதுதொடர்பாக விவரம் கேட்டிருந்தது. அதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
தண்டனைக் காலம் முடிந்த பிறகும் 48 இந்தியர்கள் வெளிநாட்டு சிறைகள் மற்றும் நாடு கடத்தும் மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் வங்கதேச சிறைகளிலும் 5 பேர் மியான்மரிலும், 2 பேர் பஹ்ரைனிலும் ஒருவர் மலேசியாவிலும் உள்ளனர்.
நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் தாமதமாகி வருவதே இதற்குக் காரணம். குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய சில விவரங்களை இந்திய தூதரகத்திலிருந்து சம்பந்தப்பட்ட நாடுகள் பெற வேண்டி உள்ளது.
அதேநேரம், தண்டனை காலம் முடிந்த இந்தியர்களை விரைவாக விடுவிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளை நமது தூதரக அதிகாரிகள் அணுகி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தண்டனை முடிந்தவர்கள் தாயகம் திரும்புவதற்கு தேவையான விமான டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.