

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் பெரும் வன்முறை மூண்டதை தொடர்ந்து மொபைல் இணைய தள சேவைக்கு கடந்த 25-ம் தேதி இரவு மாநில அரசு தடை விதித்தது.
இத்தடையை அரசு முழுவதும் விலக்கிக் கொள்ளாததால் வணிகர்களும் தொழில் துறை யினரும் கவலை அடைந்துள்ளனர்.
மாநிலத்தில் மொபைல் இணைய தள சேவை மீதான தடையை குஜராத் அரசு கடந்த திங்கள்கிழமை நீக்கியது. என்றாலும் அகமதாபாத், சூரத் ஆகிய நகரங்களில் இத்தடை நீடிக்கிறது.
அகமதாபாத், சூரத் ஆகியவை குஜராத்தின் இரு மிகப்பெரும் நகரங்களாக விளங்குகின்றன. இவை 1 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்டவை ஆகும். மேலும் மாநிலத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக சக்தியாக இவை திகழ்கின்றன. இந்நிலையில் இத்தடையால் தங்கள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அகமதாபாத், நவரங்கபுரத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறும்போது, “மொபைல் இணைய தள சேவை மீதான தடையை எல்லா பகுதிகளிலும் நீக்காமல் குஜராத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு கூறுவது அபத்தமானது” என்றார்.
இத்தடையால் ஆன்லைன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள துடன் மொபைல் சேவை நிறுவனங் களுக்கு ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் பல்கலைக்கழக மாணவி நேகா ஷா கூறும்போது, “பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், எஸ்எம்எஸ், எம்எம்எஸ் என அனைத்தையும் போலீஸார் முடக்கியுள்ளனர். குஜராத் போன்ற மாநிலத்தில் இவ்வாறு நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.
போலீஸ் பொதுமக்கள் இடையே மோதல் தொடர்பான வீடியோக்களை விஷமிகள் பரவச் செய்து பிரச்சினை உருவாக்கலாம் என்று அதிகாரிகள் அச்சப்படுகின்றனர்.
அகமதாபாத், சூரத்தில் மொபைல் இணைய தள சேவை மீதான தடை மேலும் 2 நாட்கள் அமலில் இருக்கும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் கூறினார்.