

மும்பையில் 2006 ஜூலை 11-ம் தேதி புறநகர் ரயில்களில் ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்ததில் 188 பேர் உயிரிழந்தனர்; 829 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்ற கடந்த 11-ம் தேதி தீர்ப்பளித்தது. இதில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
கமல் அகமது அன்சாரி (37), தன்வீர் அகமது அன்சாரி (37), முகமது பைசல் ஷேக் (36), எஹ்தே ஷாம் சித்திகி (30), முகமது மஜித் ஷபி (32), ஷேக் ஆலம் ஷேக் (41), முகமது சாஜித் அன்சாரி (34), முஸம்மில் ஷேக் (27), சொஹைல் மெஹ்மூத் ஷேக் (43), ஜமீர் அகமது ஷேக் (36), நவீத் ஹுசைன் கான் (30), ஆசிப் கான் (38) ஆகிய 12 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினருடன் (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த 12 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி யாதின் டி ஷிண்டே செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். எனவே, இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.