Last Updated : 16 Oct, 2020 06:53 PM

 

Published : 16 Oct 2020 06:53 PM
Last Updated : 16 Oct 2020 06:53 PM

ஜிஎஸ்டி இழப்பீடு: சரியான முதல் படி; இனி, மாநிலங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க ரூ.1.10 லட்சம் கோடி கடன் வாங்கித் தரப்படும் என்று மத்திய அரசு கூறியிருப்பது சரியான முதல் நடவடிக்கை. அடுத்த கட்டமாக மாநிலங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க இயலாது என மத்திய அரசு கைவிரித்தது.

இதற்காக மாநில அரசுகள் முன் இரு வாய்ப்புகளை மத்திய அரசு வைத்தது. மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க ரூ.97 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்குப் பின் இதை மாநில அரசுகள் திருப்பிச் செலுத்த முடியும் எனத் தெரிவித்தது.

ஆனால், 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியே கடன் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசு கூறிவிட்டது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. மத்திய அரசே கடன் பெற்றுத் தர வேண்டும் என்று மாநில அரசுகள் தெரிவித்தன. ஆனால், டெல்லி, ஜம்மு காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டன.

இந்தச் சூழலில், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக ரூ.1.10 லட்சம் கோடி கடன் பெற்றுத் தரப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது.

மத்திய நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வரவேற்றிருந்தார். இந்நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, எவ்வாறு கடனைச் செலுத்துவது என்ற வழியைக் கூற வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் இன்று கூறியிருப்பதாவது:

''மத்திய அரசின் மனமாற்றத்தை நான் வரவேற்கிறேன். சரியான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நான் வலியுறுத்துவது என்னவென்றால், மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் 2-வது அடியை எடுத்து வையுங்கள்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி கடன் பெற்றுக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஜிஎஸ்டி இழப்பீட்டில் விழுந்த இடைவெளி குறித்து எந்தத் தெளிவான பதிலும் இல்லை. நடப்பு நிதியாண்டில் ரூ.1.10 லட்சம் கோடி கடன் பற்றி மட்டுமே நிதியமைச்சரின் கடிதத்தில் இருக்கிறது.

பணம் கடன் பெறுபவர் யார், அந்தக் கடனை மாநிலங்கள் எவ்வாறு திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை. மாநிலங்கள் தங்களின் சொந்தக் கணக்கில் கடன்வாங்கத்தான் எதிர்ப்புத் தெரிவித்தன. மாநிலங்கள் கூறியது சரியானதுதான்.

ஆனால், நீங்கள் மாநிலங்களிடம் முதலில் கூறிய தொகைக்கும், 2-வதாக கூறிய தொகைக்கும் எந்த வேறுபாடும் இல்லையே. ஏற்கெனவே கூறிய விதிமுறைகளின் கீழ் நிதியை வழங்குவதன் மூலம் முட்டுக்கட்டைகளை நீக்க முடியும்''.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x