

கேரளாவில் பொது மக்களுக்குச் சிகிச்சையளிக்க, மருத்துவ நிதி உதவி வழங்கி மாநில அரசு செயல்படுத்தியிருப்பது காருண்யா சுகாதார காப்பீட்டு திட்டம் (Karunya Arogya Suraksha Pathadi - KASP). இத்திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மருத்துவ சிகிச்சை சலுகைகளுக்காக சுமார் ரூ.1,000 கோடி செலவிடப்பட்டது.
இதுகுறித்துக் கேரள அரசின் தகவல்-மக்கள் தொடர்புத்துறை தகவல் அலுவலர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''இத்திட்டத்தின் மூலம் 1.4 லட்சம் பேருக்கு டயாலிசிஸ் செய்ய ரூ.13 கோடியும், 37,427 நபர்களின் இதய சிகிச்சைக்கு ரூ.181 கோடியும், 69,842 பயனாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.84 கோடியும், 7,707 பயனாளிகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு ரூ.15 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 3,600 நபர்களும் அரசாங்கத்தின் இந்த சிகிச்சை நிதித் திட்டத்தால் பயனடைந்துள்ளனர். இந்த 2 ஆண்டு காலகட்டத்தில் மருத்துவ சிகிச்சை சலுகைகளுக்காக இதுவரை சுமார் ரூ.1,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.
குறைந்தது 24 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கிறது. பொது வார்டு மற்றும் தீவிர சிகிச்சை வார்டில் உள்ள நோயாளிகள் சிகிச்சைக்கு நன்மைகள் கிடைக்கின்றன. அனைத்து உள்நோயாளிகளுக்கான சிகிச்சை, மருந்து மற்றும் பரிசோதனைச் செலவுகள் இலவசம். மருத்துவமனையில் அனுமதிக்க மூன்று நாட்களுக்கு முன்பும், வெளியேற்றப்பட்ட 15 நாட்கள் வரையும் சோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசம்.
சிகிச்சையளிக்கும் மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் சோதனைகள், தேவையான மருந்துகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களுக்கான கட்டணங்கள் ஆகியவை இதில் அடங்கும். காப்பீட்டுத் திட்டத்தில் டயாலிசிஸ், கதிர்வீச்சு, கீமோதெரபி மற்றும் கண் நோய்களுக்கான சிகிச்சை போன்ற உள்நோயாளிகள் அல்லாத நடைமுறைகளும் அடங்குகின்றன.
காருண்யா சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 300 தனியார் மருத்துவமனைகளும் ‘எம்பேனல்’ (empanelled) செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ் சேவைகளை வழங்கும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய தகவல்கள் www.sha.kerala.gov.in என்ற இணைய முகவரியில் கிடைக்கின்றன. தற்போது பயனாளிகள் இல்லாதவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் மருத்துவரின் குறிப்பு இருந்தால் மருத்துவ உதவி வழங்கப்படும்.
இந்தச் சேவைக்காக அனைத்து மருத்துவமனைகளிலும் கே.ஏ.எஸ்.பி கியோஸ்க்குகள் ( kiosks) அமைக்கப்படுகின்றன. இதற்கு ஆதார் அட்டை உள்ளிட்ட தனிப்பட்ட அடையாள ஆதார ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களின் அடிப்படையில், KASP அட்டைக்கான தகுதி சரிபார்க்கப்பட்டு, தகுதி இருந்தால் அட்டை வழங்கப்படும். இதில் மருத்துவ சிகிச்சை ஆண்டுக்கு ரூ.5 லட்சம் இலவசமாகக் கிடைக்கிறது. பயனாளியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் உறுப்பினராகலாம்.
சுகாதாரத் துறையின் கீழ் மாநில சுகாதார நிறுவனத்தால் காருண்யா நன்மை நிதியைக் கையகப்படுத்தியதன் மூலம், மாநில லாட்டரி துறையால் நிதியளிக்கப்பட்ட மருத்துவ உதவித் திட்டம் விரைவாகத் தேவைப்படுபவர்களை அடைகிறது. தற்போது கே.ஏ.எஸ்.பி.யின் கீழ் இல்லாத மற்றும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள உறுப்பினர்கள் காருண்யா நன்மை நிதியத்தின் பயனாளிகளாகக் கருதப்படுவார்கள். புதிய விண்ணப்பங்களை KASP கியோஸ்க்குகள் மூலம் சமர்ப்பிக்கலாம். திட்டத்தின் கூடுதல் விவரங்களுக்கு திஷாவை 1056-ல் தொடர்பு கொள்ளவும். அல்லது மாநில சுகாதார முகமை வலைத்தளமான www.sha.kerala.gov.in-ஐப் பார்க்கலாம்''.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.