

அனைவருக்கும் நீர், வறட்சியற்ற மகாராஷ்ட்ரா என்ற முழக்கத்துடன் மகாராஷ்ட்ராவை ஆட்சி செய்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமை பாஜக ஆட்சியில் ஜல்யுக்த் ஷிவர் அபியான் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இது ஒரு நீர்சேமிப்புத் திட்டமாகும். இதன்படி 2019-க்குள் மகாராஷ்டிராவை வறட்சியில்லாத மாநிலமாக மாற்றுவதாகும். இத்திட்டத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் 5,000 கிராமங்களை நீர்ப்பற்றாக்குறையில்லாமல் செய்வதாகும். ஜனவரி 26,2016-ல் பட்னாவிஸ் தலைமை பாஜக ஆட்சி மகாராஷ்டிராவில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தது.
ஆனால் இது மோசடித் திட்டம் என்று 24 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் 4 பேர்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். 138 ஒப்பந்ததாரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய தலைமை தணிக்கை அதிகாரி (சிஏஜி) தாக்கல் செய்த அறிக்கையில் வேலையின் தரம், அதன் செலவு, அதன் தாக்கம் குறித்து கடும் ஐயங்களை எழுப்பியிருந்தது. இதில் பலகோடி ரூபாய்கள் ஊழல் நடந்திருப்பதாக சந்தேகப்படும் உத்தவ் தாக்கரே அரசு இது குறித்து விசாரணைக்கு புதன் கிழமையன்று உத்தரவிட்டது. பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தாலுக்காவில் 10-12 கிராமங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது பணி நிறைவு செய்யாமலே போலி பில்களை சமர்ப்பித்து முழு தொகையும் கோரப்பட்டது தெரியவந்தது.
ரூ.34 கோடி பெறுமான மொத்தம் 883 பணிகளுக்கு அனுமதி அளித்ததில் 307 பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது 50%, 30% பணிகளுக்கெல்லாம் 100% தொகை அரசிடமிருந்து கோரப்பட்டுள்ளது. மொத்த 1169 பணிகளையும் மேற்பார்வை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
உள்ளூர் காங்கிரஸ் தலைவர் விகாஸ் முண்டே, முதல் கட்ட பணிகளில் ரூ.4.41 கோடி மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். இரண்டம் கட்டத்தில் ரூ.41 லட்சம் ஊழல் கண்டுப்பிடிக்கப்பட்டது என்கிறார். “இது பலகோடி ரூபாய் ஊழல் என்றுதன நான் திரும்பத் திரும்ப கூறி வருகிறேன். இதில் உள்ள பணம் பெரியது” என்றார்.
சிஏஜி அறிக்கையை முன்னிட்டே விசாரணை: மகா. துணை முதல்வர் அஜித் பவார் விளக்கம்
இந்த விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல, சிஏஜி அறிக்கையை வைத்தே விசாரணை செய்யப்படுகிறது. இது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட பிறகே முதல்வர் உத்தவ் தாக்கரே விசாரணைக்குப் பச்சைக் கொடி காட்டினார்.
பட்னாவிஸ் முதல்வராக இருந்த போதே நீர் பராமரிப்புத் துறை வைத்திருந்த தானாஜி சாவந்த் மேலவையில் இத்திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறினார் என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார்.