Last Updated : 16 Oct, 2020 02:52 PM

 

Published : 16 Oct 2020 02:52 PM
Last Updated : 16 Oct 2020 02:52 PM

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியைத் தேர்தல் குழு தொடங்கியது

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கு அடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய தேர்தல் குழு தம் பணியைத் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்புரீதியான தேர்தல்களை நடத்துவது குறித்து அந்தக் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம் கூடி கடந்த செவ்வாய்க்கிழமை ஆலோசித்து, பணிகளைத் தொடங்குவதற்கான முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் இந்தக் கூட்டம் நடந்ததாகவும், திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளும் முறையாக நடந்தால், 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்படும் தலைவர், பதவி ஏற்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியை காரியக் கமிட்டி நியமித்தது. ஆனால், ஓராண்டாகியும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.

இதனால், காங்கிரஸ் கட்சிக்குப் புதிய ஆக்கபூர்வமான தலைமை தேவை, அமைப்புரீதியான தேர்தல்கள் நடத்த வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் கட்சியில் உள்ள கபில் சிபல், குலாம்நபி ஆசாத் உள்பட 23 மூத்த தலைவர்கள் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் கடிதம் எழுதினர்.

அந்தக் கடிதம் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி, நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து கட்சியின் பல்வேறு நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி அமைத்த சோனியா காந்தி, புதிய தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்த தேர்தல் குழுவையும் நியமித்தார்.

இந்தக் குழுவுக்கு மதுசூதன் மிஸ்திரி தலைவராகவும், ராஜேஷ் மிஸ்ரா, கிருஷ்ணா பைரே கவுடா, ஜோதிமணி, அரவிந்தர்சிங் லவ்வி ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுதான் புதிய தலைவரைத் தேர்வு செய்யும்.

இந்தக் குழுவின் தலைவர் மசூதன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அதில் தேர்தல் பணியைத் தொடங்கி நவம்பர் மாதத்துக்குள் முடிக்கவும், அதன்பின் சோனியா காந்திக்குத் தகவல் தெரிவித்து, கட்சிக்குள் தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி, காரியக் கமிட்டியில் மொத்தம் உள்ள 24 உறுப்பினர்களில் 11 மட்டுமே தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள் கட்சியின் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களையும் சேர்த்து தேர்தல் நடத்துவது என்பது மிகப்பெரிய கடினமான பணியாகும். அனைத்தும் தேர்தல் குழுவின் திட்டப்படி சுமுகமாகச் சென்றால், 2021-ம் ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x