

இனிப்புப் பண்டமான ரசகுல்லாவுக்கு புவீசார் குறியீடு அளிக்க மேற்கு வங்கம் விண்ணப்பித்துள்ளது.
ரசகுல்லாவை தங்கள் மாநில பூர்வீக இனிப்புப் பண்டம் என்று ஒடிசாவும் கூறி வரும் நிலையில், இந்த முயற்சியை மேற்கு வங்கம் எடுத்துள்ளது.
முதல்வர் மம்தா பானர்ஜியின் முழு ஆதரவோடு இதற்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டிருப்பதாக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவர் ரபீரஞ்சன் சதோபாத்யாய தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீட்டை தங்களது மாநிலத்துக்கு வழங்க ஒடிசா கோரி இருந்தது. அதற்காக 3 குழுக்களையும் நியமித்தது.
பாலாடைக்கட்டியால் ஆன பஞ்சு போன்ற உருண்டைகளை பாகில் ஊறவைத்து தயாரிப்பதே ரசகுல்லா. ரசகுல்லாவை 1868-ல் நபின் சந்திர தாஸ் முதலில் தயாரித்து அறிமுகம் செய்ததாக மேற்கு வங்கம் உரிமை கோருகிறது. தங்களது ரசகுல்லா 150 வருட பழைமை வாய்ந்தது என்கிறது மேற்கு வங்கம்.
ஒடிசாவோ, தங்களது ரசகுல்லா குறைந்தது 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், ஜகன்நாத கடவுள் லட்சுமி தாயாருக்கு இதனை வழங்கிய ஐதீகம் இருப்பதாகவும், இதற்கு மேற்குவங்கம் உரிமை கோர கூட வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றது.