

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சற்று அதிகரித்துள்ளது. அதேசமயம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொத்துக்கு மதிப்பு சற்று குறைந்துள்ளது என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்துக்கணக்கை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளனர்.
அதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம்வரை ரூ.2.85 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது ரூ.36 லட்சம் அதிகமாகும்.
கடந்த ஆண்டில் ரூ.2.49 கோடி இருந்தது. பிரதமர் மோடி பெரும்பாலும் தனது சேமிப்புகளை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். பாதுகாப்பாக வங்கியில் செய்துள்ள முதலீடுகள் மூலம் கடந்த ஓர் ஆண்டில் கிடைத்த வட்டி, சேமிப்புகள் ஆகியவை மூலம் இந்த மதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இறுதிவரை பிரதமர் மோடியின் கைவசம் ரூ.31,450 ரொக்கப்பணம் மட்டுமே இருந்துள்ளது. பிரதமர் மோடியின் வங்கியில் டெபாசிட்டாக ரூ.3,38,173 இருக்கிறது. இந்த பணத்தை குஜராத் காந்திநகரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பிரதமர் மோடி சேமித்து வைத்துள்ளார். இது தவிர வங்கியில் எப்டிஆர், எம்ஓடி வகையில் ரூ.1,60,28,939 பணத்தை மோடி சேமித்துள்ளார்.
இது தவிர பிரதமர் மோடியிடம் தேசிய சேமிப்பு பத்திரங்கள் ரூ.8,43,124க்கும், காப்பீடுகள் ரூ.1,50,957க்கும், வரிசேமிப்பு முதலீடு பங்குகள் ரூ.20ஆயிரத்துக்கும் உள்ளன. பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.1.75 கோடிக்கு இருக்கின்றன.
பிரதமர் மோடி எந்த வங்கியில் கடன் பெறவில்லை, வாகனக் கடன் எந்த வங்கியிலும் இல்லை. மோடியிடம் 45 கிராமம் எடை கொண்ட 4 தங்க மோதிரம் உள்ளன. இதன்மதிப்பு ரூ.1.50 லட்சமாகும்.
காந்திநகரில் செக்டார்-1 பகுதியில் 3,531 சதுர அடியில் ஒரு மனை இருக்கிறது. இந்த மனை பிரதமர் மோடி உள்ளிட்ட 3 பேர் கூட்டாகச் சேர்ந்து வாங்கியதாகும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொத்துப்பு மதிப்பு கடந்த ஆண்டை விடக் குறைந்துள்ளது. குஜராத்தின் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவாரக அமித் ஷா இருந்தபோதிலும், பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை, சரிவு போன்றவற்றால் அமித் ஷாவின் சொத்துப்பு மதிப்பு ரூ.28.63 கோடியாகக் குறைந்தது. கடந்த ஆண்டில் ரூ.32.30 கோடியாக இருந்தது.
குஜராத்தில் அமித் ஷாவுக்கு சொந்தமாக 10 அசையா சொத்துக்கள் உள்ளன. அதில் ஒரு சொத்து அவருக்குச் சொந்தமானதும், மற்றவை பரம்பரை சொத்துக்களாகும். இதன் மதிப்பு ரூ.13.56 கோடியாகும்.
அமித் ஷாவிடம் கைவசம் ரூ.15,814 ரொக்கம் உள்ளது. வங்கியில் ரூ.1.04 கோடி இருப்பு இருக்கிறது. காப்பீடு, பென்ஷன் பாலிசி வகையி்ல் ரூ.13.47லட்சம், ரூ.2.97 லட்சத்துக்கு வைப்பு நிதி, ரூ.44.47 லட்சத்துக்குதங்க நகைகள் இருக்கின்றன.
அமித் ஷாவின் நிகர சொத்து மதிப்பு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்துள்ளது. பங்குச்சந்தையில் பங்குகளில் முதலீடு வகையில் கடந்த மார்ச் வரை ரூ.13.5 கோடி இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு இந்த பங்குகளின் மதிப்பு ரூ.17.90 கோடிாயக இருந்தது.
அமித் ஷாவின் மனைவி சோனல் அமித் ஷாவின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டு ரூ.9 கோடி இருந்த நிலையில் இந்த ஆண்டு 8.53 கோடியாகக் குறைந்துல்ளது. பங்குகளின் மதிப்பும் ரூ.4.40 கோடியிலிருந்து ரூ.2.25 கோடியாகக் குறைந்துள்ளது.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.