

தென்மேற்கு ரயில்வே கோட்டத்தில் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த பராமரிப்புக்கான விருது மைசூரு ரயில் நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
65-வது ரயில்வே வாரத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் தென்மேற்கு ரயில்வே சார்பில், 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. தென்மேற்கு ரயில்வே கோட்டத்தின் பொது மேலாளர் ஏ.கே.சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், சிறந்து விளங்கிய ரயில் நிலையங்களுக்கும், ரயில்களுக்கும் 18 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் ஏ.கே.சிங் பேசுகையில், ''தென்மேற்கு ரயில்வே 2019 - 2020 ஆம் ஆண்டில் ரூ.2,116 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.44 சதவீதம் அதிகம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் 18.64 கோடி பயணிகள் தென்மேற்கு ரயில்வே ரயில்களில் பயணித்துள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து தென்மேற்கு ரயில்வே கோட்டத்தில் 2019- 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பராமரிப்புக்கான விருது மைசூரு ரயில் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது. ரயில் நிலையத்தைத் தூய்மையாகப் பராமரித்தது, பயணிகள் சேவையில் அக்கறை காட்டியது, தொழில்நுட்ப வசதிகளை முறையாகப் பராமரித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக இவ்விருது வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தென்மேற்கு ரயில்வே கோட்டத்தின் பொது மேலாளர் ஏ.கே.சிங் வழங்கிய விருதையும், சான்றிதழையும் மைசூரு மண்டல மேலாளர் அபர்ணா கர்க் பெற்றுக்கொண்டார். மைசூரு ரயில் நிலையம் இந்த விருதை கடந்த 2013, 2016 ஆகிய ஆண்டுகளிலும் பெற்றுள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலிலும் மைசூரு தொடர்ந்து இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.