Last Updated : 15 Oct, 2020 12:07 PM

 

Published : 15 Oct 2020 12:07 PM
Last Updated : 15 Oct 2020 12:07 PM

பழுதடைந்த பேருந்துகளை மருத்துவமனை, கழிப்ப‌றைகளாக மாற்றிய கேஎஸ்ஆர்டிசி: தேசிய அளவில் கவனிக்கப்பட்ட திட்டத்துக்கு விருது

நடமாடும் மருத்துவமனையைப் பார்வையிடும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா | கோப்புப் படம்.

பெங்களூரு

பழுதடைந்த பேருந்துகளை நடமாடும் மருத்துவமனைகளாகவும், பெண்களுக்கான கழிப்ப‌றைகளாகவும் மாற்றிய கர்நாடகப் போக்குவரத்துக் கழகத்துக்கு, தேசிய அளவிலான‌ விருது கிடைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்த நிலையில் அம்மாநில அரசும், தனியார் நிறுவனங்களும் பல்வேறு தடுப்புப் பணிகளை மேற்கொண்டன. கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி) கடந்த மார்ச் மாதத்தில் பழுதடைந்து செயல்படாமல் இருந்து பேருந்துகளைப் புதுப்பித்து, நடமாடும் மருத்துவமனைகளாகவும், பெண்களுக்கான கழிப்பறைகளாகவும் மாற்றியது.

இதையடுத்து முதல்வர் எடியூரப்பா கடந்த மே மாதம் நடமாடும் மருத்துவமனை, பெண்களுக்கான நடமாடும் கழிப்பறைகளாக மாற்றப்பட்ட பேருந்துகளைப் பார்வையிட்டுத் தொடங்கி வைத்தார். கரோனா பரிசோதனை, உடனடி சிகிச்சை வசதிகள் கொண்ட இந்த‌ நடமாடும் மருத்துவமனையில் 1 மருத்துவர், 3 செவிலியர்கள், 1 ஆய்வகத் தொழில் வல்லுநர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டனர். இந்தச் சேவை பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஹூப்ளி உள்ளிட்ட மாநகரங்களில் மக்களைத் தேடிச் சென்று குறைந்த விலையில் சிகிச்சை அளித்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல நகர்ப்புறங்களில் போதிய கழிப்பறை வசதி இல்லாமல் சிரமப்படும் பெண்களுக்காக நடமாடும் கட்டணக் கழிப்பறை, பேருந்துகளில் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் நகர்ப்புறப் பெண்கள் மிகவும் பயனடைந்தனர். கர்நாடகப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த இரு திட்டங்களும் தேசிய அளவில் பெரும் கவனம் ஈர்த்தன. பிற மாநிலங்களின் போக்குவரத்துக் கழகங்களும் இந்தத் திட்டத்தைப் பின்பற்ற முன்வந்துள்ளன.

இந்நிலையில் தேசிய அளவில் சிறந்த சமூகப் பங்களிப்புக்கான விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இவ்விழாவில் பழுதடைந்த பேருந்துகளை நடமாடும் மருத்துவமனை, கழிப்பறைகளாக மாற்றிய கர்நாடகப் போக்குவரத்துக் கழகத்தின் முயற்சிக்கு 2020‍ சிறந்த சமூக பங்களிப்புக்கான விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்துக் கர்நாடகப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஷிவயோகி சி.கலாசத் கூறுகையில், ''கரோனா தடுப்புப் பணியில் எங்கள் ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். கரோனா முன் தடுப்புப் பணியில் ஈடுபட்டு சிலர் உயிரிழந்தும் இருக்கின்றனர். அவர்களின் தியாகத்துக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன். எங்களின் ஆக்கபூர்வமான முயற்சியை பிற மாநிலப் போக்குவரத்துக் கழகங்களும் பின்பற்ற முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x