

நாகாலாந்தில் முன்னாள் பள்ளி ஆசிரியர் ஹாம்ஷென் கொன்யாக், தன் மகனிடம் ஒரு புத்தம்புதிய எஸ்.யு.வி. காரின் சாவியை ஒப்படைக்கும் போது ஒரேயொரு அறிவுரைதான் சொன்னார். ‘இந்தப் பரிசை நல்ல பயன்களுக்காக உபயோகப்படுத்து’ என்றார்.
இந்தக் கார் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஹாம்ஷென் கொன்யாக்கின் ஓய்வுநல நிதியிலிருந்து வாங்கிக் கொடுக்கப்பட்டது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற பழமொழியை அனுசரித்த 39 வயது மகன் ஹங்னாவோ கொன்யாக் அந்த காரை கரோனா காலத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவுவோருக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவையாக மாற்றினார்.
சுமார் 100-க்கும் அதிகமான நாட்களை இவ்வாறு இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக தன் தந்தை பரிசளித்த காரை சமூக நலன்களுக்காகப் பயன்படுத்தினார். கொஹிமாவுக்கு 3 ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டன, இதில் ஒன்று வழங்கப்பட்டதையடுத்து ஹங்னாவோ கொன்யாக் தன் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முடித்துக் கொண்டார்.
கொன்யாக் சமூக ஆர்வலர் என்பதோடு நாகா மக்கள் முன்னணி மாவட்டக் கிளை உறுப்பினராகவும் இருக்கிறார்.
தனக்கு தந்தை பரிசாக அளித்த காரை இலவச ஆம்புலன்ஸாக சேவைக்கு பயன்படுத்தியது மட்டுமல்ல, உதவ ஆளில்லாத நோயாளிகளுக்கு உதவியாகவும் இருந்துள்ளார். மேலும் கொன்யாக் பழங்குடியினத்தவர் நோய்வாய்ப்படும்போது மருத்துவமனையில் இவர்களது பாஷை புரியாத மருத்துவர்களிடம் விளக்கும் சேவையையும் செய்து வந்துள்ளார் கொன்யாக்.
மேலும் ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைத்து மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மேலும் இவர்களை மருத்துவமனையிலிருந்து வீட்டிலும் கொண்டு இறக்கி விடுவார் கொன்யாக்.
ரத்தம் கட்டுவதை பாதிக்கும் நோயுடைய மேட்னா கொன்யா என்பவருக்கு ஏ+ ரத்தம் தேவைப்பட்ட போது இவர் உதவி புரிந்துள்ளார்.
தனது சேவை குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறிய ஹாங்னாவோ கொன்யாக், “மாவட்ட மருத்துவமனை கரோனாவுக்கென பிரத்யேக மருத்துவமனையாகும். இங்கு உள்-நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டும் எனும்போது என் காரை நான் வெட்டியாக வைத்திருக்க முடியாது. மாவட்ட அதிகாரிகளிடம் போய் என் காரை 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையாக மாற்ற அனுமதிகோரினேன்.
நான் ஒரு 150 நோயாளிகளை இட்டுச் சென்றிருப்பேன், எத்தனை நோயாளிகளை அழைத்துச் சென்றுள்ளேன் என்று கணக்கு வைக்கச் சொன்னார்கள், ஆனால் நான் வைத்துக் கொள்ளவில்லை. நான் இதை கணக்குக்காகச் செய்யவும் இல்லை, பணத்துக்காகவும் செய்யவும் இல்லை” என்றார்.
ஒரேயொரு முறை இவர் செய்யும் மானுட சேவைக்காக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் இவருக்கு 50 லிட்டர் டீசல் இலவசமாக வழங்கினார்.
இந்நிலையில் இவரது சேவையை மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களும் நன்றியுடன் பாராட்டி வருகின்றனர்.
-மூலம்: தி இந்து ஆங்கிலம்..
தமிழில் சுருக்கமாக: இரா.முத்துக்குமார்