

சமாஜ்வாதிக் கட்சியின் தலைவரும் உ.பி.யின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், அவரின் மனைவி சாதனா குப்தா இருவரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை சமாஜ்வாதிக் கட்சி தனது ட்விட்டர் பக்தத்தில் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக்கட்சித் தலைருமான முலாயம் சிங்கிற்கு தற்போது 80 வயதாகிறது. வயது முதுமை காரணமாக தீவிர அரசியலில் பெரும்பாலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். சமாஜ்வாதிக் கட்சியின் பெரும்பாலான முக்கிய முடிவுகளை தந்தையின் ஆலோசனைப்படி, அகிலேஷ் யாதவ் எடுத்து வருகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் அரசின் முக்கியப் பதவியில் உள்ள அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் பலர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உடல்நலன் தேறியுள்ளனர். இதில் சேட்டன் சவுகான் உள்பட இரு அமைச்சர்கள் கரோனா தாக்கத்தால் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் முலாயம் சிங் யாதவ், அவரின்மனைவி கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து சமாஜ்வாதிக் கட்சி வெளியிட்ட அறிவிப்பில் “ சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு சுவாசிப்பதில் பிரச்சினை இருப்பது தெரிந்தது. இதையடுத்து, மருத்துவப்பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முலாயம் சிங்கின் மனைவி சாதனா இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இருவருக்கும் கரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. இருவரும் உடல்நலத்துடன் இருக்கிறார்கள். ஆனாலும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ என் தந்தைக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிந்தவுடன் மேதாந்தா மருத்துவமனையில் உடனடியாக அனுமதி்த்தோம். அவரின் உடல் நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணி்த்து வருகின்றனர். மருத்துவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து அவ்வப்போது விவரங்களைகேட்டறிந்து வருகிறோம். என் தந்தை நலனுடன் உள்ளார்” எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் தற்போதுவரை 36,898 பேர் கரோனாவில் சிகிச்சையில் உள்ளனர். 4,01,306 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 6,507 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.