Published : 15 Oct 2020 09:19 AM
Last Updated : 15 Oct 2020 09:19 AM

இயற்கைப் பேரழிவு பாதிப்பு: சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் இந்தியா 

கடந்த 2000 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டு கால கட்டத்தில் உலக நாடுகள் சந்தித்துள்ள இயற்கை பேரிடர்களை ஐக்கிய நாடுகள் சபையின் பேரழிவு அபாய குறைப்புக்கான அலுவலகம் கணக்கெடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா 3-வது இடத்தை பெற்று உள்ளது.

சீனா 577 பேரிடர் நிகழ்வுகளை இந்த 20 ஆண்டில் சந்தித்து உள்ளது. அடுத்ததாக அமெரிக்கா (467 நிகழ்வுகள்), இந்தியா (321), பிலிப்பைன்ஸ் (304), இந்தோனேஷியா (278) போன்ற நாடுகளும் அதிக நிகழ்வுகளை சந்தித்து இருக்கின்றன. இந்த நாடுகள் அனைத்தும் பன்முக நிலவகை மற்றும் அபாய பகுதிகளில் அடர்த்தியான மக்கள் தொகையையும் கொண்டிருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக முதல் 10 நாடுகளில் 8 நாடுகள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவை ஆகும். குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் ஆசிய நாடுகள் 3,068 பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கின்றன. அடுத்ததாக வட, தென் அமெரிக்கா கண்டங்கள் 1,756 நிகழ்வுகளையும், ஆப்பிரிக்கா 1,192 நிகழ்வுகளையும் சந்தித்து இருக்கின்றன.

இந்த பேரிடரில் கரோனா போன்ற உயிரியல் சார்ந்த இடர்களை கணக்கில் கொள்ளவில்லை என கூறியுள்ள பெல்ஜியம் பல்கலைக்கழக பேராசிரியர் தேபராத்தி குகா, பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ள தவறியதும், கரியமில வாயு உள்ளிட்ட வானிலை மாற்றத்தை பாதிக்கும் பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக உற்பத்தி செய்வதுமே மனித குலத்தின் இத்தகைய துன்பத்துக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

இதே நிலை நீடித்தால் மானுடக் குலத்தின் எதிர்காலமே இருண்டதாகி விடும் என்று பேராசிரியர் குகா எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x