காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம்: பரூக் அப்துல்லா கருத்துக்கு காங். தலைவர் கரண் சிங் எதிர்ப்பு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம்: பரூக் அப்துல்லா கருத்துக்கு காங். தலைவர் கரண் சிங் எதிர்ப்பு
Updated on
1 min read

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பரூக் அப்துல்லா கூறிய கருத்தை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு காஷ்மீரில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் பிரிவினைவாத அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, "சீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மறுபடியும் கொண்டுவரப்படும்’’ என்று சமீபத்தில் தெரிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பரூக் அப்துல்லா கூறிய கருத்து அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்து முற்றிலும் ஏற்க முடியாதது. ஓராண்டாக வீட்டுக் காவலில் இருந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக பரூக் அப்துல்லா இவ்வாறு பேசுகிறார் என்று கருதுகிறேன். இதுபோன்ற கருத்துகள் காஷ்மீர் மக்களிடம் தேவையற்ற, சாத்தியமில்லாத எதிர்பார்ப்பை தூண்டிவிடும்.

மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கிறேன். பரூக் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் இணைந்து செயல்பட்டு ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும். காஷ்மீரின் 2 யூனியன் பிரதேசங்களும் சமமான வளர்ச்சி பெற வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட அதுதான் ஒரே வழியாக இருக்கும். இவ்வாறு கரண் சிங் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in