Published : 15 Oct 2020 08:13 AM
Last Updated : 15 Oct 2020 08:13 AM

மத்திய அரசின் 5-ம் கட்ட தளர்வுகளின்படி பள்ளிகள், திரையரங்குகள் இன்று திறப்பு

புதுடெல்லி

மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த 5-ம் கட்ட தளர்வுகளின்படி பள்ளிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இன்று திறக்கப்பட உள்ளன.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட இந்த பொது முடக்கம், பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பள்ளிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்களை அக்டோபர் 15 முதல் திறக்க மத்திய உள் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதேநேரம், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உட்பட கரோனா பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகள் இன்று அமலுக்கு வரவுள்ளன. அதேநேரம் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் இறுதி முடிவு எடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக பெற்றோரின் எழுத்துபூர்வ அனுமதியுடன் மாணவர்களை நேரடி வகுப்புகளில் அனுமதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் பள்ளிகளை திறப்பதில்லை என முடிவு செய்துள்ளன. அதேநேரம் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என பஞ்சாப் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுபோல உத்தரபிரதேச அரசு வரும் 19-ம் தேதி திறக்க முடிவு செய்துள்ளது.

திரையரங்குகளைப் பொருத்தவரை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீத டிக்கெட்களை மட்டுமே விற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிக்கெட்களை முடிந்தவரை இணைய வழியில் வழங்க வேண்டும், போதுமான டிக்கெட் கவுன்ட்டர்களை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள.

பொழுதுபோக்கு பூங்காக்களில் அடிக்கடி மக்களால் தொடக்கூடிய பகுதிகளை கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக போதுமான பாதுகாவலர்களை பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்களை திறப்பது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒலிம்பிக்-அளவிலான நீச்சல் குளத்தில் ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20 பேருக்கு பயிற்சி அளிக்கலாம். பயிற்சியாளரும் பயிற்சி பெறுவோரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x