Published : 15 Oct 2020 08:09 AM
Last Updated : 15 Oct 2020 08:09 AM

கரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 70% பேர் ஆண்கள்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்

நாடு முழுவதும் கரோனா வைரஸுக்கு பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-

நாட்டில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 17 வயதுக்கு கீழ் மற்றும் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு சதவீதம் பேர் ஆவர். அதேநேரத்தில் 60 வயதுக்குட்பட்டவர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணிக்க கூடாது. அவற்றை கடைப்பிடித்தால்தான் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கரோனா உயிரிழப்பில் 45 முதல் 60 வயது வரை பிற நோய்வாய்ப்பட்டவர்களில் 14 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.பிற நோய்கள் இல்லாதவர்களில் 1.5 சதவீதம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் தொடர்ந்து கடந்த 10 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது. இதுவரை 1.1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 சதவீத உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் 23 சதவீத உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் கே.பால் கூறும்போது, “கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு நோய்க்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் வரை பொதுமக்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

குளிர் காலம் என்பது வைரஸ் பரவுவதற்கு உகந்ததாக அறியப்படுகிறது. பல நாடுகளில் இப்போது 2-வது அலை காணப்படுகிறது. இது முதல் அலையைவிட மோசமானதாக இருக்கும். எனவே நாம் கவனமாக இல்லாமல் பண்டிகை காலத்தில் கூட்டம் கூடினால் சூப்பர் பரவல் நிகழ்வுகளாக கரோனா வைரஸ் மாறும். எனவே முகக்கவசம் அணிவதன் மூலமும் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலமும் கூட்டத்தை தவிர்ப்பதன் மூலமும் இதைத் தவிர்க்க முடியும். தடுப்பூசி வரும் வரை நமக்கு இதுதான் ஒரே வழி" என்றார்.

இந்தியாவில் தினமும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த 5 வாரங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் தினமும் 92 ஆயிரம் பேர் என்ற அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த மாதம் 2-வது வார தொடக்கத்தில் 70 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு சதவீதம் மற்ற நாடுகளை விட நம் நாட்டில் குறைவாக உள்ளது. நாட்டில் வைரஸ் உயிரிழப்பு சதவீதம் 10 லட்சம் பேரில் 79 பேர் என்ற நிலையில் உள்ளது. ஆனால் உலக அளவில் 10 லட்சம் பேரில் 138 பேர் உயிரிழக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x