

தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கொட்டித் தீர்த்த அதிகனமழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 117 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வெள்ளம் சூழ்ந்தது.
ஏராளமான மக்கள் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளனர்.
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 10-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெல்ல நகர்ந்து மத்திய வங்கக் கடலின் மேற்கு பகுதியில் மையம் கொண்டது. பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது நேற்று முன் தினம் (13-ம் தேதி) காலை 6.30 முதல் 7.30 மணிக்குள் வடக்கு ஆந்திர கடற்கரையோரம், காக்கிநாடாவுக்கு மிக அருகில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இது நேற்று காலை வட கர்நாடகத்தின் உள் பகுதியில் நுழைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சற்று வலுகுறைந்து நிலவி வந்தது.
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, கர்நாடக மாநிலம் குல்பர்காவில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது அரபிக் கடலை நோக்கி நகர்ந்து, 16-ம் தேதி அதிகாலை மகாராஷ்டிர மாநில கடலோரப் பகுதியில் கடலில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரம் முழுவதும் இடைவிடாது அதி கனமழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரில் சுமார் 1,500 குடியிருப்புகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுகளாக காட்சி அளிக்கின்றன. ஏராளமானோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவிக் கின்றனர்.
கன மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், ஹைதராபாத் நகருக்கு வெளியே பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சில இடங்களில் பேருந்துகள், லாரிகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டது.
சாலை, தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்த தால் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ககன்பேட் என்ற இடத்தில் ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். சோமாஜி கூடா யசோதா மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்ததால் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் தீயணைப்பு வீரர்கள், போலீஸார் உள்ளிட்டோர் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடு
பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகள் செய்து தரப் பட்டுள்ளன.
வெள்ள சேதம், மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடர் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் கே.டி. ராமாராவ் தலைமையில் ஹைதராபாத் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பலத்த மழை காரணமாக தெலங்கானாவில் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு பாத்தபஸ்தி சந்திராயன் குட்டா பகுதியில் 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில், ஒரு வீட்டிலிருந்த 5 பேரும் மற்றொரு வீட்டில் 2 மாத குழந்தை உட்பட 4 பேரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 2 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
ஹைதராபாத் நகரில் மட்டும் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்ததாக கூறப் படுகிறது. பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நகரில் ஒரேநாளில் 32 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த 3 நாட்களில் 119 செ.மீ. மழை பெய்துள்ளது. ஹைதராபாத்தில் 1903-ம் ஆண்டு இதேபோன்று பலத்த மழை பெய்ததாக கூறப்படுகிறது. 117 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலத்தின் கடலோர பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பிரகாசம் அணையில் இருந்து உபரி நீர்வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், அவைகளை அப்புறப்படுத்தும் பணிகள் வேகப்படுத்தப் பட்டுள்ளன.
ஆந்திராவில் இதுவரை மழை, வெள்ளத்தில் 10 பேர் உயி ரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல் வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.