

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கியதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தனது இல்லத்தில் இன்று நடத்திய சிறிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா பங்கேற்றனர்.
கடந்த 14 மாதங்களாக தடுப்புக் காவல் சட்டத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். இன்று காலையில் மூன்று தலைவர்களும் சந்தித்து ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து பேசியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.
அந்த அறிவிப்புச் செய்வதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மெகபூபா முப்தி மட்டும் விடுவிக்கப்படாமல் அவருக்கான காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென நேற்று இரவு வீட்டுக் காவல் விலக்கப்பட்டு மெகபூபா முப்தி விடுவிக்ககப்பட்டார். தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா இல்லத்துக்குச் சென்ற பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி அவரைச் சந்தித்துப் பேசினார். உடன்உமர் அப்துல்லாவும் இருந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்தியஅரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் 3 தலைவர்களும்ஆலோசித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்துக்குப்பின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்” மெகபூபா முப்தி தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அவரை வீட்டுக்கு எனது தந்தை அழைத்திருந்தார். என் தந்தையின் அழைப்பை ஏற்று மெகபூபா முப்தி வீட்டுக்கு வந்திருந்தார். அவரின் உடல்நலன் குறித்து எனது தந்தை விசாரித்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது குறித்தும், அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நாளை கூடும் குப்கார் தீர்மானத்தின் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க பிடிபி தலைவர் மெகபூபா முப்தியும் என் தந்தையின் அழைப்பை ஏற்று சம்மதித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.