

மத்தியஅமைச்சகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் இனிமேல் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவையைத்தான் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 12-ம் தேதி அனைத்து அமைச்சகங்கள், செயலாளர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது மத்திய அரசு. மத்திய நிதியமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், “ அனைத்து அமைச்சகங்கள், துறைஅலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் சுயாட்சி அமைப்புகள் அனைத்தும் இனிமேல் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் சேவையை கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும்.
தொலைத்தொடர்பு இணைப்புகள், இன்டர்நெட் பயன்பாடு, பிராண்ட்பேட் இணைப்பு, லேண்ட்லைன் அனைத்துக்கும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் சேவைதான் பயன்படுத்த அதிகாரிகள் தங்களின் கீழ் உள்ள நிர்வாக அமைப்புகளுக்கு கூறி செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-20ம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிர்வாகம் ரூ.15,500 கோடியும், எம்எடிஎன்எல் ரூ.3,694 கோடியும் இழப்பைச் சந்தித்த நிலையில்,மத்திய அரசின் இந்த உத்தரவு இழப்பில் ஓடும் இரு நிறுவனங்களுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும்.
ஆனால், பிஎஸ்என்எல் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் 2008-ல் 2.9 கோடி பேர் இருந்த நிலையில் ஜூலை மாதம்வரை 80 லட்சமாகக் குறைந்துவிட்டனர். எம்டிஎன்எல் நிர்வாகத்திடம் கடந்த 2008 நவம்பரில் 35.4 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்த நிலையில் கடந்த ஜூலையில் 30.7 லட்சமாகக் குறைந்துவிட்டனர்.