

மாநிலங்களவையில் காலியாகும் 11 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் காலியாகும் 10 இடங்களில் 8 இடங்களை ஆளும் பாஜக எளிமையாகக் கைப்பற்றும் எனத் தெரிகிறது. சமாஜ்வாதிக் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கலாம்.
உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது.
உத்திரப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் அருண் சிங், நீரஜ் சேகர், ஹர்தீப் சிங் புரி ஆகியோரும் சமாஜ்வாதிக்கட்சியின் டாக்டர் சந்திரபால் சிங் யாதவ், ஜாவெத் அலி கான், ராம்கோபால் யாதவ், ராம பிரகாஷ் வர்மா ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜாராம், வீர் சிங், காங்கிரஸ் சார்பில் பன்னா லால் பூனியாவும் ஓய்வு பெறுகின்றனர். உத்திரகாண்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ் பாப்பர் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, இந்த இடங்களுக்காக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
தேர்தலுக்கான அறிவிக்கை வரும் 20ம் தேதி வெளியிடப்படும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 27ம் தேதியாகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28-ம் தேதியும் மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி நவம்பர் 2 என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெற்று, அன்று மாலை 5 மணி அளவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு எளிதாக 8 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பும், சிறிது முயன்றால் 9 இடங்களையும் பெறலாம் எனத் தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு 304 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக மாநிலங்களவைத் தேர்தல் உ.பி.யில் நடக்கும் போது ஒரு கட்சிக்கு 300 எம்எல்ஏக்கள் பலம் இருப்து இதுதான் முதல் முறையாகும்.
உ.பியில் நடந்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 388 இடங்களையும், 1977ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சி352 இடங்களையும் வென்றது.
மொத்தமுள்ள 403 உறுப்பினர்களில், தற்போது அவையில் 395 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் பாஜகவுக்கு மட்டும் 304 உறுப்பினர்கள் பலம் இருக்கிறது. ஒரு எம்.பி. சீட்டுக்கு 38எம்எல்ஏக்கள் வாக்கு தேவை என்ற ரீதியில் பாஜக 8 இடங்களை எளிதாக வெல்ல முடியும்.
சமாஜ்வாதிக் கட்சியிடம் 48 எம்எல்ஏக்கள் இருப்பதால், ஒரு இடம் மட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள், அப்னா தளத்துக்கு 9 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சி, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு சேர்தது 7 எம்எல்ஏக்கள், 5 சுயேட்சைகள் உள்ளனர்.இந்த வகையில் பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைப்பது உறுதியாகிவிடும்.
மேற்கொண்டு ஒரு இடத்தைக் கைப்பற்ற சுயேட்சை எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ், அப்னா தளத்திடம் பேச்சு நடத்தினால் ஒரு இடத்தைப் பெற முடியும்.
இதுகுறித்து அரசியல் ஆய்வாளர் பிரிஜேஸ் சுக்லா கூறுகையில் “ நீண்ட காலத்துக்குப்பின இதுபோன்ற தேர்தல் உ.பி.யில் நடக்கிறது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிக்கு எம்எல்ஏக்கள் குறைவு என்பதால், இருவரும் சேர்ந்தால்கூட ஒரு இடத்தை வெல்ல முடியாது.
ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் சேர்ந்தாலும், இடங்களை வெல்வது கடினம்தான். ஆனால் சமாஜ்வாதிக் கட்சிக்குஒரு இடம் கிைடப்பது உறுதி. பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைப்பது உறுதி. இன்னும் கடுமையாக முயற்சித்தால் ஒரு இடத்தை பாஜக பெற முடியும” எனத் தெரிவித்தார்.