

எங்கள் கட்சிக் கூட்டணியான 'மகா கத் பந்தன்' ஆட்சி அமைந்தால் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் சட்டம் இயற்றப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு எதிராக முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சி களத்தில் உள்ளது.
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ராகோபூர் தொகுதியில் தனது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று காலை தனது தாயார் ரப்ரி தேவி மற்றும் மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரின் ஆசீர்வாதங்களை பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
வரவிருக்கும் தேர்தலுக்காக இன்று நான் ராகோபூரிலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யப் போகிறேன். ராகோபூர் மக்கள் எப்போதும் எங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். மக்கள் மீண்டும் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.
நாங்கள் அரசாங்கத்தை அமைத்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான சட்டங்களை நிறைவேற்றுவோம். இவை அரசாங்கத்தில் நிரந்தரமான பணியிடங்களைக்கொண்ட வேலைவாய்ப்புளாக இருக்கும்.''
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.