ஜம்மு காஷ்மீரி்ல் மீண்டும் 370-வது பிரிவு கொண்டுவர போராடுவோம்; மத்திய அரசின் செயல் பகல்கொள்ளை: மெகபூபா முப்தி விமர்சனம்

பிடிபி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி : கோப்புப்படம்
பிடிபி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370-வது பிரிவைக் கொண்டுவர எங்களின் போராட்டம் தொடரும். காஷ்மீர் விவகாரத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று ஜம்முகாஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி 14 மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்து விடுதலையானபின் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.

இந்த அறிவிப்புச் செய்வதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், விசாரணையின்றி ஓராண்டு வரை காவலில் வைத்திருக்க முடியும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர்.

இதில் கரோனா லாக்டவுனை மத்திய அரசு அறிவிக்கும் நாளில்தான் உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டார். ஆனால், மெகபூபா முப்தியை விடுவிப்பது குறித்து எந்த முடிவையும் காஷ்மீர் நிர்வாகம் எடுக்காமல் தடுப்புக் காவலை ஆகஸ்ட் மாதத்திலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து, ஜம்மு காஷ்மீர் உள்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில் பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி மீது விதிக்கப்பட்டிருந்த தடுப்புக் காவல் சட்டம் நீக்கப்பட்டு அவர்நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் மெகபூபா முப்தியை விடுவிப்பது தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் இரு நாட்களில் வர இருக்கும் நிலையில் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் திடீர் நடவடிக்கை எடுத்து மெகபூபாவை விடுவித்துள்ளது.

இந்நிலையில் பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ட்விட்டரில் 83 வினாடிகள் ஓடும் ஒலிநாடாவில் பேசி வெளியிட்டுள்ளார் .

அதில் அவர் கூறுகையில் “ ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு பறித்தது பகல் கொள்ளை. எங்களிடம் இருந்து சட்டவிரோதமாக , ஜனநாயகத்துக்கு விரோதமாக, அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பறிக்கப்பட்டதை நாங்கள் மீண்டும் திரும்பப்பெறுவோம் என நான் உறுதி செய்கிறேன்.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ள நிலையில் காஷ்மீருக்கு தீர்வு கிடைக்க நாங்கள் பணியாற்றுவோம். இது சாதாரணமான பணி அல்ல. நாம் செல்லும்வழியில் ஏராளமான தடைகளும், கடினமான விஷயங்களும் இருக்கும்.

ஆனால், நம்முடைய உறுதியானதன்மை மற்றும் தீர்மானம் இந்த போராட்டத்தில் நமக்கு உதவியாக இருக்கும். நான் விடுவிக்கப்பட்டுவிட்டேன், அதேபோல பல்ேவறு சிறைகளில் இருக்கும் காஷ்மீர் மக்களை விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in