

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட் டம், கூடூர் அருகே செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக நெல்லூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை, போலீஸார் செல்லா கால்வா பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தமிழக கூலி தொழிலாளர்களை செம்மரம் வெட்டும் வேலைக்கு அனுப்பும் ரவி, ராஜேந்திரன் ஆகியோர் போலீஸாரைக் கண்டு தப்பி ஓட முயன்றனர். இவர்களை போலீஸார் துரத்திப் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கூறிய தகவலின் அடி ப்படையில்,செல்லா கால்வாஏரி மணலில் பதுக்கி வைத்திருந்த 190 கிலோ எடையுள்ள, 11 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1.4 லட்சம் என கூறப்படுகிறது. இவைகளை ரம்பத்தால் சிறு துண்டுகளாக வெட்டி சென்னைக்கு கடத்த இருந்தது போலீஸ் விசாரனையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பையன் புச்சையன் (29), ராஜு கோவிந்தராஜு (26), பெரிய பையன் சக்கரை (38), குப்பன் சம்பத் (22), குப்பன் மோகன் (28), பட்டு ராமசந்திரன் (29), கரியன் ஜெயராமன் (35), வெள்ளையன் ராமகிருஷ்ணன் (20), பெரியப்பன் கோவிந்தராஜு (19), வெங்கடேஷ் விஜி (30), முனுசாமி முருகன் (29), குப்பன் ரமேஷ் (33), பெரியப்பன் சேகர் (22) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.
நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகள், வருவாய், காவல் துறையைச் சேர்ந்த சிலருடன் செம்மரக் கடத்தல்காரர்கள் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டு செம்மங்களை கடத்திவருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூடுதல் எஸ்.பி. கங்காதர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.