

கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மக்களின் வருமானம் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு கடன் தவணைகளை ஒத்திவைக்கும் வசதி வழங்கப்பட்டது. அந்த 6 மாத தவணைகளுக்கு வட்டி மற்றும் வட்டிக்கான வட்டி என வங்கிகள் வசூலிக்க முடிவு செய்தன.
ஏற்கெனவே கடனைச் செலுத்த முடியாமல் திணறும் நிலையில் வட்டிக்கு மேலும் வட்டி வசூலிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பான வழக்கில் கடந்த வாரம் அரசு தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் மனுதாரர்கள் முன்வைக்கும் பல பிரச்சினைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் அரசிடமும், ரிசர்வ் வங்கியிடமும் மேலதிக விளக்கங்களைக் கேட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நேற்று செவ்வாய் கிழமை எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் புதன் கிழமை அதாவது இன்றைக்கு விசாரணையை ஒத்திவைத்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
வங்கிகள் பாதிக்கும்
இந்த வழக்கில் எடுக்கப்படும் முடிவு, லட்சக்கணக்கான கடன்தாரர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல பல வங்கிகள் சம்பந்தப்
பட்டதும் கூட எனக் கூறப்பட்டுள்ளது. எனவே கடன்கள் தொடர்பாக அதிக சலுகைகளை வழங்குவது வங்கிகளைப் பாதிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி மேல்முறையீடு செய்த வழக்கில் வங்கிகள் தங்களின் வாராக் கடன்களை வகைப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கி, வாராக் கடன்களை வகைப்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது தவறும்பட்சத்தில் பெரிய அளவில் இந்திய நிதித்துறையில் சிக்கல் உண்டாகும் என்றும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும் பலவீனமாக்கும் என்றும் கூறியுள்ளது.