

கரோனா நோயாளிகளுக்காக 3 ஆயிரம் கிலோ ஆப்பிள்களை வைத்து சிறப்புப் பூஜை நடத்தி, அகமதாபாத் கோயிலில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
அகமதாபாத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஸ்வாமி நாராயண் மந்திர் உள்ளது. இங்கு நாரயண தேவர், லட்சுமி நாரயண தேவர் ஆகிய இரு தெய்வங்கள் பிரதானமாக உள்ளன. இக்கோயில் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் ஸ்வாமிநாராயண் கோயில் மூடப்பட்டது. அரசு பொதுமுடக்கத் தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், நவராத்திரியை முன்னிட்டு ஸ்வாமி நாராயண் மந்திர் இன்று (அக்.13) திறக்கப்பட்டது.
இந்நிலையில், கோயிலில் கரோனா நோயாளிகளுக்காக 3 ஆயிரம் கிலோ ஆப்பிள்களை வைத்து சிறப்புப் பூஜை நடத்தி, வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சிவப்பு, பச்சை மற்றும் தங்க நிறங்களில் ஆப்பிள்கள் சிறு முக்கோண வடிவில் அடுக்கப்பட்டன. அவை அனைத்தும் பூஜைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு மரப் படிகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
இதுகுறித்துக் கோயில் பூசாரி கூறும்போது, ''பூஜைக்குப் பிறகு அனைத்து ஆப்பிள்களும் கோவிட் 19 நோயாளிகளுக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.
.