Last Updated : 28 Sep, 2015 04:03 PM

 

Published : 28 Sep 2015 04:03 PM
Last Updated : 28 Sep 2015 04:03 PM

தாயாரை போற்றிக் கலங்கிய மோடி: ஃபேஸ்புக் தலைமையக கலந்துரையாடலில் உருக்கம்

ஃபேஸ்புக் தலைமையகத்தில் பேசும்போது, தனது தாயாரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி கண் கலங்கினார். பிரதமர் மோடியின் பேச்சு அங்கு இருந்த அனைவரும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, கலிஃபோர்னியாவின் மென்லோ பார்கில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தில் கலந்துரையாடினார்.

அப்போது மோடியிடம் அவரது தாயார் பற்றி பேச மார்க் ஸக்கர்பெர்க் கேட்டுக்கொண்டார். அப்போது நீண்ட நேரம் அமைதி காத்த பிரதமர் மோடி பின்னர் பேசினார்.

தளர்ந்த குரலில் தனது பருவ காலத்தை நினைவுகூர்ந்து பேசிய அவர், "நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். ரயில் நிலையங்களில் தேநீர் விற்றேன். தேநீர் விற்றவன் பிரதமர் ஆக முடிந்தது அசாத்தியமானது.

சாதாரணமானவனை பிரதமராக்கிய இந்திய மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நான் நன்றி கூற கடமைபட்டுள்ளேன். நன்றிக்குரித்தானவர்கள் வரிசையில் அடுத்து இருப்பவர் எனது தாய் தான். அவருக்கு நன்றி கூறி எனது கடமையை முடித்துக்கொள்ள முடியாது.

எனது தந்தை இறந்துவிட்டார். எனது தாய் ஹீரா பென்னுக்கு தற்போது 90 வயது. இப்போதும் தனது வேலைகளை அவரே செய்கிறார். தெம்பாக இருக்கிறார். அவருக்கு படிக்க, எழுத தெரியாது. டிவியில் செய்திகளைப் பார்த்து நாட்டு நடப்பை தெரிந்துகொள்கிறார்.

சிறுவனாக இருந்தபோது எனக்காகவும் மற்ற பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அவர், அக்கம் பக்கத்து வீடுகளில் பாத்திரம் கழுவும் வேலை, தண்ணீர் எடுத்து தருவது என பல கூலி வேலைகளை அவர் செய்வார். தனது பிள்ளைகளை வளர்க்க எந்த அளவுக்கு துயரப்பட முடியுமோ, அதனையும் தாண்டி அவர் பல பிரச்சினைகளை அவரது வாழ்க்கையில் கடந்து வந்துள்ளார். இதற்கு மேல் நான் அவரை பற்றி பேசத் தேவையில்லை.

இது நரேந்திர மோடியின் தாய், அவரது கதை மட்டுமே அல்ல. இந்தியாவில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் குடும்பத்துக்காக தங்களது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிப்பவர்கள். இந்திய தாய்மார்கள் அனைவருமே வணங்கக்கூடியவர்கள்.

தாயின் ஆசிர்வாதம் நம்மை என்றும் உத்வேகப்படுத்தும். சரியான பாதையில் கொண்டு செல்லும்" என்றார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் ஃபேஸ்புக் தலைமையகத்தில் இருந்த மார்க் ஸக்கர்பெர்க்கின் பெற்றோரையும் மோடி சந்தித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x