Published : 13 Oct 2020 06:02 PM
Last Updated : 13 Oct 2020 06:02 PM

மீண்டும் தொடங்கும் அதிவேகப் படகுச் சேவை: அன்புடன் அழைக்கிறது ஆலப்புழா

எர்ணாகுளம்

கேரள மாநிலம் ஆலப்புழாவில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிவேகப் படகு சவாரி சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கேரள அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

''நீர்வழிப் போக்குவரத்துத் துறையின் சார்பாகக் குளிர்சாதன வசதி கொண்ட படகுகள் எர்ணாகுளம், வைக்கம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் வழித்தடங்களில் இயங்குகின்றன. 2018-ல், எர்ணாகுளம் பாதையில் இப்படகுகள் வெற்றிகரமாக இயக்கப்பட்ட நிலையில், மேலும் பல்வேறு வழித்தடங்களில் ஏ.சி. படகுச் சேவையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆலப்புழா பாதையில் படகுச் சேவை தொடங்கப்பட்டது.

இது சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதையே இலக்காகக் கொண்டது. எனினும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தொடக்கத்திலேயே இந்தச் சேவை நிறுத்தப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில், கரோனா பொதுமுடக்கம் மற்றும் நோய்த்தொற்று நெறிமுறைகளுக்கு இணங்க இந்தச் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

ஒரு படகில் 120 பயணிகள் வரை செல்ல முடியும். அதில் 40 குளிர்சாதன வசதி கொண்ட இருக்கைகளும், 80 குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைகளும் உள்ளன. பேருந்து வசதிக்கேற்ற நேரங்களை ஒட்டி இந்தப் படகுச் சேவை உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இதைச் சிரமமின்றி அனுபவிக்க முடியும்.

எர்ணாகுளம் - வைக்கம் வழித்தடத்தில் ஏ.சி. இருக்கைக் கட்டணம் ரூ.80 என்றும், ஏ.சி. அல்லாத கட்டணம் ரூ.40 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆலப்புழா - கோட்டயம் வழித்தடத்தில் இது முறையே ரூ.100 மற்றும் ரூ.50 ஆகும். ஆலப்புழா - குமரகம் வழித்தடத்தில் இது முறையே ரூ.300 மற்றும் ரூ.200 ஆகும்.

படகுகள் காலை 7.30 மணிக்குக் கோட்டயத்திலிருந்து புறப்பட்டு காலை 9.30 மணியளவில் ஆலப்புழாவை அடையும். மீண்டும் மாலை 5.30 மணிக்கு ஆலப்புழாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்குக் கோட்டயம் வந்து சேரும். சாலைப் போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளாமல் குறைந்த நேரத்தில் பயணம் செய்ய இந்தப் படகுச் சேவை பயணிகளுக்குப் பலனளிக்கும். தினசரி அலுவலகம் செல்பவர்களும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலை மற்றும் மாலை நேரப் பயணிகள் சேவைகளுக்கு இடையில், சுற்றுலாப் பயணிகள் இயற்கைக் காட்சிகளைத் தரிசிக்கும் வண்ணம் கூடுதலாக இரண்டு பார்வையிடல் சேவைகளைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புன்னமடா, முகம்மா, கைபுரம், பத்திரமணல் மற்றும் தண்ணீர்முக்கம் பண்ட் வழியாக குமரகம் பறவைகள் சரணாலயம் போன்றவற்றை இந்தப் படகு சவாரி மூலம் கண்டுகளிக்க முடியும். ஆலப்புழா படகில் ஒரு சிற்றுண்டிக் குடிலும் அமைக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x