Last Updated : 13 Oct, 2020 03:45 PM

 

Published : 13 Oct 2020 03:45 PM
Last Updated : 13 Oct 2020 03:45 PM

ராஜஸ்தானின் கொல்லப்பட்ட கோயில் பூசாரிக்கு நீதிகேட்டு அயோத்தியில்  ‘சாமியார்’ ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதம்

புதுடெல்லி

ராஜஸ்தானின் கரவுலியில் கடந்த அக்டோபர் 7 இல் ஒரு கோயில் பூசாரி நிலப்பிரச்சனையில் கொலை செய்யப்பட்டார். இவருக்கு நீதிகேட்டு உத்திரப்பிரதேசம் அயோத்தியில் ஒரு ‘சாது’ சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி உள்ளார்.

ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தின் புக்னா கிராமத்தை சேர்ந்தவர் பாபு லால் வைஷ்ணவ்(55). இங்குள்ள ஒரு பழமையான கோயிலில் பூசாரியாக உள்ளார்.

இவரை கடந்த மாதம் 7 ஆம் தேதி நால்வர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றனர். இவர் கோயில் நிலத்தை ஆக்கிரமிக்கத் தடையாக இருந்தார் எனப் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், பூசாரி பாபு லால் குடும்பத்தினருக்கு ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில் ரூ.10 லட்சம் உதவித்தொகையாக அளிக்கப்பட்டது. இவரது குடும்பதினருக்கு அரசு பணியும் அளிப்பதாக உறுதி கூறப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளியான கைலாஷ் மிஸ்ரா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடிவரும் நிலையில், இப்பிரச்சனையில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உபியின் அயோத்தியில் உள்ள சாதுக்கள், ராஜஸ்தான் கோயில் பூசாரி கொல்லப்பட்டதை கண்டித்தனர். இவர்களில் ஒருவரான அனுமர்கடி மடத்தை சேர்ந்த சாது ராஜு தாஸ் சாகும்வரை உண்ணாவிரதம் துவக்கி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ராஜு தாஸ் கூறும்போது, ‘பிராமணரான பூசாரி பாபு லால் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளார். இவரது கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

இவரது ஏழைக் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ரூ.1 கோடி அளிக்கப்பட வேண்டும். இந்த நீதி கிடைக்கும் வரை எனது உண்ணாவிரதம தொடரும்.’ எனத் தெரிவித்தார்.

தனது உண்ணாவிரதப் பந்தலில் சாது ராஜு தாஸ், காங்கிரஸுக்கு எதிரான பதாகைகளை மாட்டி வைத்துள்ளார். இதற்கு ராஜஸ்தானில் ஆளும் முதல்வர் அசோக் கெல்லோட் தலைமையில் அரசாக காங்கிரஸ் இருப்பது காரணம்.

அயோத்தியின் ராம் ஜானகி கோயிலில் ஏற்கனவே ஒரு சாது உண்ணாவிரதப் போராட்டம் துவக்கி நடத்தி வருகிறார். இதில், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்பது சது பரமஹன்ஸின் கோரிக்கையாக உள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x