

முன்னாள் மத்திய அமைச்சர் பாலாசாகேப் வீக்கே பாட்டீல் சுயசரிதை நூலை வெளியிட்ட பிரதமர் மோடி விவசாயச் சீர்த்திருத்தங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் இவை விவசாயிகளை தொழில் முனைவோர்களாக உரிமையாளர்களாக உயர்த்த உதவும் என்று பேசினார்.
விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவே இந்தச் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன, என்றும் நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகளின் வருவாயைப் பற்றி கவலை கொண்டு அவர்கள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்றைய நிலையில் விவசாயத்தையும் விவசாயிகளையும் ‘அன்னதாதா’ என்ற உணவு வழங்குவோர் என்ற நிலையிலிருந்து தொழில்முனைவோர்களாக, உரிமையாளர்களாக உயர்த்தும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
குஜராத், மகாராஷ்டிரா, ஹரியாணா, மற்றும் பஞ்சாபில் பால், சர்க்கரை, கோதுமை ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளன இத்தகைய உள்ளூர் மாதிரிகள் நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும்.
சுதந்திரத்துக்குப் பிறகு ஒரு கட்டத்தில் போதிய உணவுப்பொருட்கள் நாட்டில் இல்லாத நிலை இருந்தது. எனவே உணவு உற்பத்திப் பெருக்கமே அரசின் முன்னுரிமையாக இருந்தது. ஆகவே ஒட்டுமொத்த கவனமும் உணவு உற்பத்தியை அதிகரிப்பதில்தான் இருந்தது.
விவசாயிகள் அந்த இலக்கை எட்ட அயராது கடினமாக உழைத்தனர். ஆனால் அரசும் கொள்கைகளும் விவசாயிகளின் லாபங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை. ஆனால் உற்பத்தி பெருக்கத்தில் அதிக கவனம் இருந்து வந்தது.
அப்போதெல்லாம் விவசாயிகளின் வருவாய் பற்றி மறந்து போய்விட்டனர். நாட்டில் முதல்முறையாக விவசாயிகளின் வருவாய் பற்றி யோசித்திருக்கிறோம். அந்தச் சிந்தனைப் போக்கில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம்.
பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் சிறு சிறு செலவுகளுக்குக் கூட விவசாயிகள் அடுத்தவரிடம் கடன் வாங்கும் நிலைமையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பிற உழவர்களுக்கு வங்கிகள் மூலம் சுலபமாகக் கடன் பெற கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 2.5 கோடி விவசாயக் குடும்பங்கள் இந்த கடன் அட்டையினால் பயனடைந்துள்ளனர்.
கரும்பு விவசாயம் புதிய மற்றும் பழைய முறைகளுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. கரும்பிலிருந்து எத்தனால் எடுக்க தற்ப்து தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்ட்ராவில் இத்தகைய 100 தொழிற்சாலைகள் உள்ளன. அதே போல் வேளாண் பொருட்கள் சேமிப்பு, பாதுகாப்புக்காக உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நவீனமயம் மூலம் கிராம விவசாயிகளும் பயனடைவார்கள்.
பிரதமர் கிரிஷி சிஞ்ச்சாயி யோஜனாவின் கீழ் மகாராஷ்டிராவில் 26 திட்டங்கள் அதிவிரைவு கதியில் முடிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 9 திட்டங்கள் நிறைவடைந்து விட்டன. இந்தத் திட்டங்கள் நிறைவடைந்தவுடன் 5 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்து விடும்.
முத்ரா திட்டத்தின் கீழ் கிராமத்தில் சுயவேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இதோடு மட்டுமல்லாமல் சுய உதவிக்குழுவில் உள்ள 7 கோடி சகோதரிகளுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.