மனைவிக்கு வாய்ப்பளிக்காவிட்டால் நானே போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பேன் - பிஹாரின் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸை மிரட்டும் ஜன் அதிகார் கட்சியின் பப்பு யாதவ்

மனைவிக்கு வாய்ப்பளிக்காவிட்டால் நானே போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பேன் - பிஹாரின் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸை மிரட்டும் ஜன் அதிகார் கட்சியின் பப்பு யாதவ்
Updated on
1 min read

பிஹாரின் வால்மீகிநகர் மக்களவை தொகுதிக்கு நவம்பர் 7 இல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தனது மனைவி ரஞ்சிதாவிற்கு வாய்ப்பளிக்காவிட்டால் தானே போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பதாகக் காங்கிரஸை மிரட்டி வருகிறார் ஜன் அதிகார் கட்சியின் தலைவரான பப்பு யாதவ்.

பிஹாரின் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம்பெற்றவர் பப்பு யாதவ் என்கிற ராஜீவ் ரஞ்சன். சுயேச்சை எம்எல்ஏவாக இரண்டு முறை இருந்தவர் பிறகு ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி மற்றும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி ஆகியவற்றிலும் இருந்தார்.

கடைசியாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சியில் இணைந்து நான்கு முறை எம்பியாகவும் இருந்தார். கடந்த மே, 2015 இல் பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக ஆர்ஜேடியில் இருந்து லாலுவால் நீக்கப்பட்டார்.

இதனால், தனியாக ஜன் அதிகார் கட்சி துவக்கி நடத்தி வருகிறார். அதேசமயம் அவரது மனைவியான ரஞ்சீதா ரஞ்சன் யாதவ் காங்கிரஸின் மக்களவை எம்.பியாக இரண்டு முறை வென்றவர்.

தனது சுபோல் தொகுதியில் கடந்த வருடம் மக்களவை தேர்தலில் ரஞ்சீதாவிற்கு தோல்வி ஏற்பட்டது. இதனால், அவர் பிஹார் சட்டப்பேரவையுடன் இணைந்து நடைபெறும் வால்மீகிநகர் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ரஞ்சீதா போட்டியிட விரும்புகிறார்.

ஆனால், காங்கிரஸ் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளருக்கே மீண்டும் அங்கு போட்டியிட வைக்க விரும்புகிறது. இதனால், தான் வேறு கட்சி தலைவர் என்றாலும் மனைவி பிரச்சனையில் தலையிட்டார் பப்பு யாதவ்.

இதில், தனது மனைவிக்கு வாய்ப்பளிக்கா விட்டால் தானே அங்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸின் வாக்குகள் பிரித்து அதன் வேட்பாளரை தோல்வியுறுச் செய்வதாகவும் காங்கிரஸிடம் பப்பு மிரட்டல் விடுத்திருப்பதாகத் தெரிந்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக உத்திரப்பிரதேசத் தலீத் தலைவரான சந்திரசேகர் ஆசாத்தின் ஆஸாத் சமாஜ் கட்சியுடன் பப்பு யாதவ் ஒரு கூட்டணி அமைத்துள்ளார். இதன் சார்பில் லாலு கட்சி தலைமையிலான மெகா கூட்டணியின் வாக்குகளை ஓரளவிற்கு பிரித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், வால்மீகிநகர் இடைத்தேர்தலில் மனைவிக்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்கும் என பப்பு விலகி இருந்தார். கடந்த வருடம் வால்மீகிநகரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி(என்டிஏ) சார்பில் ஐக்கிய ஜனதா தளம் வென்றிருந்தது.

முதல்வர் நிதிஷ்குமார் கட்சியின் எம்.பியான வைத்தியநாத் மஹதோ மறைந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியை மீண்டும் என்டிஏவிடம் பெற்ற நிதிஷ், மஹதோவின் மகனான சுனில் குமாருக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளார்.

ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் பல்வேறு கட்சிகளில் இருப்பது வழக்கமே. இதில், ஒரு கட்சியில் இருப்பவர் மற்றவருக்காக அவரது கட்சியில் தலையிடுவது பிஹாரில் தான் நிகழும் எனக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in