யுஏஇ தூதரை தனிப்பட்ட முறையில் பினராயி விஜயன் சந்தித்தார்: தங்கக் கடத்தல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் தகவல்

யுஏஇ தூதரை தனிப்பட்ட முறையில் பினராயி விஜயன் சந்தித்தார்: தங்கக் கடத்தல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் தகவல்
Updated on
1 min read

இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தூதரை பலமுறை தனிப்பட்ட முறையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்துள்ளார் என தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.

இந்த தங்கம், அங்குள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தின் பெயரால் கடத்தப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் அந்த துணைத் தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசு ஊழியருமான இளம்பெண் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஸ்வப்னா, அங்குள்ள அரசியல்வாதிகளுடனும் மூத்த அதிகாரிகளுடனும் நெருக்கமாக பழகியது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் தங்கக் கடத்தலில் நடந்த சட்டவிரோத கருப்பு பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்துகிறது. இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டவர்கள் மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கொச்சியில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்தக் குற்றப்பத்திரிகையில், முதல்வர் பினராயி விஜயன், பல முறை ஐக்கிய அரபு அமீரக தூதரை 2017-ம் ஆண்டில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் கேரள அரசின் முதன்மைச் செயலராக பணியாற்றிய எம்.சிவசங்கரை, கேரள அரசின் அதிகாரப்பூர்வ தொடர்பு நபராக, தூதரிடம் முதல்வர் பினராயி விஜயன் அறிமுகப்படுத்தியதாகவும் ஸ்வப்னா தெரிவித்துள்ளார் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பு திருவனந்தபுரத்திலுள்ள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் நடைபெற்றதாகவும் ஸ்வப்னா தெரிவித்துள்ளார். ஆனால் முதல்வர் அலுவலகம் இதை மறுத்துள்ளது. பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளை வைத்து இது தொடர்பாக பதில் அளிக்க முதல்வர் அலுவலகம் தயாராக இல்லை என்றும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in