

கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கூடாரங்களை அமைத்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதனால் லடாக் எல்லையில் போர்ப் பதற்றம் நீடிக்கிறது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டது.
இந்தப் பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த 6 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனா 60,000க்கும் மேற்பட்ட ராணுவ படையினரை குவித்து வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்ற 7-வது சுற்று பேச்சு வார்த்தை நேற்று பகல் 12 மணிக்கு சுஷுல் பகுதியில் தொடங்கியது.இந்தியா தரப்பில் லே பகுதியில் அமைந்துள்ள 14 கார்ப்ஸ் பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சீனா தரப்பில் உயர் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். பகல் 12 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் இரவு வரை நீடித்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.