சுங்கச்சாவடி கட்டணத்தில் பிரதமர் தலையிட வேண்டும் : அக். 1 முதல் ஏஐஎம்டிசி காலவரையறையற்ற வேலைநிறுத்தம்

சுங்கச்சாவடி கட்டணத்தில் பிரதமர் தலையிட வேண்டும் : அக். 1 முதல் ஏஐஎம்டிசி காலவரையறையற்ற வேலைநிறுத்தம்
Updated on
1 min read

லாரி ஓட்டும் தொழிலை வெகுவாக பாதிக்கும் டோல் கட்டணங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கம் (ஏஐஎம்டிசி) வேண்டுகோள் விடுத்துள்ளது.

93 லட்சம் லாரி உரிமையாளர்கள், 50 லட்சம் பஸ்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இந்த சங்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சங்கம் சார்பில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் காலவரையறையற்ற நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

நல்ல நாள், சப்கா சாத், சப்கா விகாஸ், மேக் இன் இண்டியா, தொழில் செய்வது சுலபம் உள்ளிட்ட மத்திய அரசின் கோஷங்கள் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் தான். ஏழைகளுக்கும் குறிப்பாக சாலைப் போக்குவரத்தைச் சேர்ந்த வர்களுக்கு இது வெறும் கற்பனை யில் மட்டும்தான்.

அதீத வரிவிதிப்புகள், பின்னடை யச் செய்யும் கொள்கைகள், சட்டங்கள் போன்றவை சாலைப் போக்குவரத்துத் துறையை மேலும் அழிப்பதுடன், ஊழல், முறைகேடு, மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவற்றையே வலுப்படுத்தும்.

டோல் கட்டணங்கள் உண்மையா கவே காலனி ஆதிக்கத்தின் குறி யீடுகள். இவை, அத்துமீறல்கள் மற்றும் ஊழலின் கூடாரங்களாக உள்ளன. சுங்கச் சாவடிகளில் அசுரத்தனமாக வளரும் ஊழல், அத்துமீறல்கள், காலவிரயம் ஆகியவை காரணமாக இந்தியாவில் போக்குவரத்துத் துறையின் நலனை நீடித்திருக்கச் செய்யாது. எனவே வருவாய் வேண்டுமெனில் அவற்றை மறைமுக வரியாக வசூலிக்கலாம்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 373 சுங்கச் சாவடிகள் ரூ.1.73 லட்சம் கோடி முதலீ்ட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 72 ஆயிரத்து 300 கோடி ரூபாய் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 14,192 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்ட 63 சுங்கச் சாவடிகளில் இருந்து ரூ.22,636 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டோல் கட்டண வசூல் என்பது வெளிப்படையாக இல்லை. ஐஐஎம் ஆய்வின்படி அடிக்கடி வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மனித உழைப்பு மற்றும் எரிபொருள் இழப்பு போன்ற இழப்புகளால் ரூ. 87 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே, இப்பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும். டோல் கட்டணம் மூலம் அரசு வருவாய் ஈட்டுவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. வருவாய் இழப்பின்றி சுங்கச் சாவடி இல்லாத இந்தியா என்ற நிலையை எட்ட பிரதமர் மோடி தலையிட வேண்டும். மறைமுக வரி விதிப்பு மூலம் இதனைச் சாதிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடர்ந்தால், தினமும் ரூ.1,500 ரூ.1,700 கோடி வரை இழப்பு ஏற்படும். அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் இதர பொருட் கள் தேங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in