Published : 18 Sep 2015 03:42 PM
Last Updated : 18 Sep 2015 03:42 PM

கேரளாவில் மீண்டும் டிப்தீரியா நோய்: தடுப்பூசிகளை மறுத்த நம்பிக்கை

டிப்தீரியா, உலகிலிருந்து அகற்றப்பட்ட நோய்களில் ஒன்றாகும். டிப்தீரியா நோய்த்தடுப்பு வாக்சைன் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தைப் பருவத்திலேயே டிப்தீரியாவுக்கு தடுப்பூசிகள் போடப்பாட்டு பாதுகாப்பு அரண் அமைத்து நெடுங்காலம் ஆகிவிட்டது.

ஆனால் கேரளாவில் கோழிக்கோடு மருத்துவமனையில் நேற்று 12 வயது சிறுவன் டிப்தீரியா நோய்க்கு பலியானதாக எழுந்த செய்திகளை அடுத்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

ஆனால் கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில் சுமார் 12-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டிப்தீரியா நோய் ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. உலகிலிருந்து டிப்தீரியா நோய் நீக்கப்பட்ட பின்பும், மீண்டும் டிப்தீரியா தலைதூக்கியிருப்பது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் இப்பகுதியில் வாழும் மக்களில் ஒரு பிரிவினர் தீவிர மதநம்பிக்கை காரணமாக வாக்சைன்கள், நோய் எதிர்ப்பு மருந்து, உடல் எதிர்ப்பு சக்தி பெருக்க மருந்துகள் எதையும் எடுத்துக் கொள்வதில்லை.

திரூரில் உள்ள மத்ரசாவில் ஆசிரியராக பணியாற்றும் அப்துல் ரஹ்மான் கூறும்போது, “எனக்கு மருத்துவர்களை விட அல்லாவிடமே அதிக நம்பிக்கை இருக்கிறது. கடவுளை விட மருத்துவரை நாம் நம்பினால், அது துரோகம்” என்கிறார்.

நேற்று (வியாழக்கிழமை) கோழிக்கோட்டில் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்த 12 வயது சிறுவன்அமீருதீன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இப்பகுதியில் வாழும், நோய் எதிர்ப்பு மருந்துகளை, வாக்சைன்களை எடுத்துக் கொள்ளாத ஆயிரக்கணக்கானோரில் இந்தச் சிறுவனும் ஒருவர். தற்போது 12க்கும் மேற்பட்ட குழந்தைகள் டிப்தீரியா நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேருக்கு டிப்தீரியா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதிர்ச்சியூட்டும் தரவு என்னவெனில், 5 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகளில் மூன்று பேர்களில் ஒருவர் என்ற விகிதத்தில் நோய் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லை. அதாவது 36% எந்த வித நோய்த்தடுப்பு ஊசிகளையும், மருந்துகளையும் எடுத்துக் கொள்ளவில்லை.

சமீபத்திய அதிகாரபூர்வ தரவுகளின் படி, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்கும் குறைவான 342,657 குழந்தைகளில் 23,912 குழந்தைகள் எந்த விதமான தடுப்பூசிகளும் போடப்படவில்லை. நோய் தடுப்பு மருந்துகள் இவர்களுக்கு காட்டப்படக் கூட இல்லை.

இதனால் காசநோய், டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ், ஹெபடைடிஸ்-பி, மூளை அழற்சி நோய், அம்மை, போலியோ ஆகிய நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. தடுப்பூசிகள் இவர்களுக்கு கிடைக்காமல் இல்லை, மாறாக இவர்கள் மதநம்பிக்கை காரணமாக அதனை எடுத்து கொள்ள வேண்டுமென்றே மறுத்துள்ளனர்.

இதில் குறிப்பாக மதநெறிமுறைகளைக் கடைபிடிக்கும் இருபெரும் பிரிவுகள் அடங்கும், இவர்கள் போதனை முறையினால் நோய்த் தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் அங்கு பயன்படாமல் போயுள்ளது.

ஒரு பிரிவினர் கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியர் தலைமையின் கீழான சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். மற்றொரு பிரிவினர்கடுமையான ஜமாயத் எ-இஸ்லாமியத்தை பின்பற்றுபவர்கள்.

தற்போது டிப்தீரியா விவாதம் தலைதூக்கிய நிலையில், ஜமாயத் தலைவர் ஷைக் மொகமது கரகுன்னு தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, தங்களது இயக்கம் சார்பாக நோய்த்தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகளை குழந்தைகள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று எந்த உத்தரவும் இடவில்லை. என்றார்.

சன்னி பிரிவினரும் இதே நிலைப்பாட்டையே தெரிவித்தனர். ஆனால் இவர்கள் நோய்த் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதன் அவசியத்தைப் பற்றி வலியுறுத்தவில்லை. குழந்தைகளுக்கு வாக்சின் அளிக்க வேண்டும் என்று இவர்கள் எடுத்துரைக்கவில்லை.

கேரள ஆளும் கட்சியின் கூட்டணியில் பெரும்பங்கு வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கூட இந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது டிப்தீரியா விவகாரம் எழுந்துள்ள நிலையில் இக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர், அப்துல் ஹமீத் கூறும்போது, "தடுப்பூசிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது இது அவசியமான ஒன்று" என்றும் தெரிவித்தார்.

மேலும், சிலர் மதக் காரணங்களுக்காக அல்லாமல் தடுப்பூசிகளுக்கு எதிராக வாதாடினர், உதாரணமாக, கேரள ஹோமியோபதி அமைப்பின் மொகமட் ஜஸீல் கூறும்போது, "நோய்த்தடுப்பூசிகளை நாங்கள் மறுக்கவில்லை, ஆனால் குழந்தைகளை பரிசோதனைக் கருவிகளாக்குவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

ஏற்கெனவே அகற்றப்பட்ட நோய்களுக்கு இன்னும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x