

படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராடி வரும் ஹர்திக் படேலுக்கு நெருக்கமானவர்களை குஜராத் போலீஸ் கைது செய்து வருகிறது.
ஹர்திக் படேலின் முக்கிய கூட்டாளி என்று கருதப்படும் நிலேஷ் படேலை சவுராஷ்டிராவில் உள்ள மோர்பியில் கைது செய்தனர். போராட்டத்தின் போது சமூக வலைத்தளத்தில் ‘பிரதமர் மற்றும் முதல்வருக்கு எதிராக அநாகரீகமான மொழியைப் பயன்படுத்தியதாக’ புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் குற்றச்சாட்டுடன், "சமூகத்தில் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வன்முறைச் செய்திகள் அனுப்பியதாக' சைபர் கிரைம் பிரிவிலும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
'ஹர்திக் படேலை கண்டுபிடியுங்கள்'
இதற்கிடையே ஹர்திக் படேலைக் கண்டுபிடித்து வியாழக்கிழமை கோர்ட்டில் ஆஜர் படுத்துமாறு குஜராத் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஹர்திக் படேல் வழக்கறிஞர் ஏற்கெனவே ஹர்திக் போலீஸ் காவலில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இதனை போலீஸ் மறுப்பதோடு, வடக்கு குஜராத்திலிருந்து அவர் தலைமறைவாகி போலீஸ் கண்களில் படாமல் நடமாடி வருகிறார் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆட்கொணர்வு மனு செய்யப்பட்டதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு ஹர்திக் படேலை வியாழக்கிழமையன்று ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ஹர்திக் படேலுக்கு நெருங்கிய சிராக் படேலை அவர் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பாக நேற்று இரவு 8.30 மணியளவில் போலீஸார் கைது செய்தனர்.
ஹர்திக் ஒரு கிரிமினல் குற்றவாளி: ஐஜி
குஜராத் மாநில முதன்மை போலீஸ் உயரதிகாரி ஒருவர் ஹர்திக் படேலை கிரிமினல் குற்றவாளி என்று வர்ணித்தார். வடக்கு குஜராத்தில் படேல் சமூக நிகழ்ச்சி ஒன்றிலிருந்து போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி ஹர்திக் தப்பித்துள்ளார் என்று குற்றஞ்சாட்டினார்.
"அவர் போலீஸ் அனுமதியின்றி கூட்டம் நடத்தினார், உடனே போலீஸ் அந்த இடத்துக்கு விரைந்து வந்த போது அவர் தப்பிச் சென்றுவிட்டார்" என்று காந்திநகர் ஐஜி ஹஸ்முக் படேல் தெரிவித்தார்.
“அவர் ஒரு கிரிமினல், அவர் எந்த சமூகத்தின் தலைவரோ அல்லது போராட்டத்தின் தலைவரோ அல்ல. போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்ட முயற்சி செய்பவரே அவர்.
ஆனால் ஹர்திக் படேலோ, எந்த வித அடக்குமுறைக்கும் தயார் என்று கூறியிருப்பதோடு, போராட்டத்தை நசுக்க தங்கள் சமூகத்தினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.