Last Updated : 12 Oct, 2020 06:15 PM

 

Published : 12 Oct 2020 06:15 PM
Last Updated : 12 Oct 2020 06:15 PM

ஹாத்ரஸ் வழக்கில் உ.பி. அரசின் செயல் மனிதநேயமற்றது; அறத்துக்கு மாறாக உள்ளது: ராகுல், பிரியங்கா காந்தி விமர்சனம்

ஹாத்ரஸ் பலாத்காரக் கொலை வழக்கில் உத்தரப் பிரதேச அரசு மனிதநேயமற்று, அறத்துக்கு மாறாகச் செயல்படுகிறது. கடமையைச் செய்யவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் விமர்சித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை போலீஸார் வலுக்கட்டாயமாக ஹாத்ரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டுவந்து தகனம் செய்தனர். வலுக்கட்டாயமாக பெண்ணின் உடலைத் தகனம் செய்ய போலீஸார் நிர்பந்தித்தனர் என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் விருப்பத்துடனே தகனம் செய்யப்பட்டது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ட்விட்டர் மூலம் ஹாத்ரஸில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக உ.பி. அரசை விமர்சித்துள்ளனர்.

ராகுல் காந்தி ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டு உ.பி. அரசை விமர்சித்துள்ளார். அதில், “ஹாத்ரஸ் சம்பவத்தில் உ.பி. அரசின் மனநிலை மனிதநேயமற்று, அறத்துக்கு மாறாகச் செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதலாக இருப்பதற்குப் பதிலாக, குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும், மாற்றத்துக்காக ஒரு அடி நாம் நகர வேண்டும்” என்று கூறி ஸ்பீக்ஃபார் உமன் சேஃப்டி என்ற ஹேஷ்டேகைப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டரில் 2 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை இணைத்துள்ளார். அதில் அவர் பேசுகையில், “நான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டுக்குச் செல்ல முயன்றபோது ஏன் தடுக்கப்பட்டேன், என்னை ஏன் அனுமதிக்கவில்லை என எனக்குப் புரியவில்லை.

குற்றம் செய்தவர்களுக்கு உதவி செய்து, அவர்களைப் பாதுகாப்பது அரசின் பணி அல்ல. ஆனால், குற்றம் செய்தவர்களைச் சிறைக்கு அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும். உ.பி. அரசு தனது பணியைச் செய்யவில்லை. அதனால்தான் நான் தடுத்து நிறுத்தப்பட்டேன்.

நான் உ.பி.அரசுக்குச் சொல்லிக்கொள்வதெல்லாம், குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்பும் பணியைத் தொடங்குங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள். இது ஒரு பெண்ணின் கதையல்ல. தேசத்தில் உள்ள லட்சக்கணக்கான பெண்களின் கதை. கடமையைச் செய்யவில்லையே என லட்சக்கணக்கான பெண்கள் அரசை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

உ.பி.அரசுக்கு நெருக்கடி கொடுத்து, சமூகத்தில் மாற்றம் வர உதவுவது அவசியம். ஏனென்றால், இந்த தேசத்தில் என் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் மொத்தமாக அநீதி நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலையும், உண்மையையும் கேட்பதற்குப் பதிலாக, குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவர்கள் அவதூறு செய்யப்படுகிறார்கள். இது மிகவும் வெட்கப்பட வேண்டிய, கோழைத்தனமான செயல்.

ஆனால், இந்த தேசத்தின் பெண்கள் நீண்ட காலத்துக்கு அமைதியாக இருக்க மாட்டார்கள். ஒரு சகோதரி பாதிக்கப்பட்டால், லட்சக்கணக்கான சகோதரிகள் குரல் எழுப்புவார்கள். துணையாக இருப்பார்கள். எங்களின் சொந்தப் பாதுகாப்பை நாங்களே ஏற்கிறோம். இப்போது பெண்களின் பாதுகாப்பை பெண்களே ஏற்கப்போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x