மக்களவை தேர்தலில் தோற்ற வேட்பாளர்கள் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி

மக்களவை தேர்தலில் தோற்ற வேட்பாளர்கள் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி
Updated on
1 min read

கடந்த வருடம் மக்களவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு பலரும் தோற்றிருந்தனர். இவர்களில் 10 பேர் ஆர்ஜேடி மற்றும் வேறு கட்சிகள் சார்பில் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பிஹாரின் நவாதா தொகுதியில் ராஜவல்லபின் மனைவியான விபா தேவி போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். இவருக்கு ஆதரவாக பிஹாரின் முன்னாள் முதல்வரும் லாலுவின் மனைவியுமான ராப்ரி தேவியும் பிரச்சாரம் செய்திருந்தார்.

இவரை மீண்டும் ஆர்ஜேடி நவதா நகரத் தொகுதியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது. இவரது கணவர் ராஜாவல்லப் மீது பாலியல் வழக்கில் கைதாகி வழக்கு நடைபெறுகிறது.

சரண் தொகுதியில் லாலுவின் இளையமகன் தேஜ் பிரதாப் யாதவின் மாமனாரான சந்திரிகா ராய் போட்டியிட்டார். இவர் 1 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இவர் தற்போது லாலுவிடம் இருந்து வெளியேறி, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சியில் சேர்ந்துள்ளார். சந்திரிகா ராயை பிஹாரின் பாஸா தொகுதியில் நிதிஷ் வேட்பாளராக்கி உள்ளார்.

இதேபோல், தன் மூத்த தலைவரான அப்துல் பாரி சித்திக்கீயை தர்பங்காவில் மக்களவை தொகுதிக்கு ஆர்ஜேடி வாய்ப்பளித்திருந்தது. இதில் இரண்டரை லட்சம் வாக்குகளில் அப்துல் பாரி தோல்வி அடைந்தார்.

இவரை மீண்டும் அலி நகர் சட்டப்பேரவைக்கு ஆர்ஜேடி போட்டியிடும் வாய்ப்பை அளித்துள்ளது. ஜெஹனாபாத் மக்களவை தொகுதியில் தம் மூத்த தலைவரான சுரேந்திர யாதவை ஆர்ஜேடி நிறுத்தி இருந்தது.

இதில் சுரேந்தர் வெறும் 1752 வாக்குகளில் தோல்வி அடைந்தார். இதனால், அவரை அம்மாவட்டத்தின் பேலாகன்ச் தொகுதியில் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆர்ஜேடி வாய்ப்பளித்துள்ளது.

இதே கட்சியில் ஷிவச்சந்திர ராம் ஹாஜிபூர் மக்களவை தொகுதியில் தோல்வி அடைந்திருந்தார். இவரை ஆர்ஜேடி மீண்டும் பத்தேபூரில் வேட்பாளராக்கி உள்ளது. பூபேந்திர் யாதவ் என்பவரும் ஆர்எல்எஸ்பியில் போட்டியிட்டு 1.41 லட்சம் வாக்குகல் வித்தியாசத்தில் ராம்விலாஸ் பாஸ்வானை எதிர்த்து தோல்வி அடைந்தார்.

இந்தமுறை ஆர்ஜேடியில் இணைந்து விட்ட பூபேந்தர், பிஹாரின் தொரய்யா சட்டப்பேரவை தொகுதிக்கு போட்டியிடுகிறார். பிஹாரின் சிறையில் இருக்கும் பிரபல கிரிமினல் குற்றவாளி சையது சஹாபுத்தீன்.

இவரது மனைவியான ஹென்னாவிற்கு கடந்த மக்களவையில் ஆர்ஜேடி சிவான் தொகுதியில் நிறுத்தியது. இதில் தோல்வி அடைந்தவரை அதன் ஒரு சட்டப்பேரவை தேர்தலிலும் நிறுத்த உள்ளது.

இதுபோல், மேலும் பல கட்சிகளில் மக்களவைக்காக போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர்கள் சட்டப்பேரவைக்கு குறி வைப்பது தொடர்கிறது. இவர்களுக்கு கிடைக்கும் பலன் வரும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in